சென்னை: Adipurush (ஆதிபுருஷ்) ஆதிபுருஷ் படத்துக்காக அனுமனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கைக்கு அருகில் இருக்கும் சீட்டுக்கான டிக்கெட் விலை உயர்வு என்று பரவிய தகவலுக்கு பட தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
ராமாயணத்தை அடிப்படையாக வைத்து ஓம் ராவத் இயக்கியிருக்கும் ஆதிபுருஷ். பாகுபலி மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்த பிரபாஸ் இப்படத்தில் நடிக்கிறார். அவருடன் சைஃப் அலிகான், கீர்த்தி சனோனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஹிந்தி,தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக ஜூன் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
ப்ரீ பிஸ்னெஸ்: முதலில் வெளியிடப்பட்ட படத்தின் டீசரில் கிராஃபிக்ஸ் காட்சிகள் படு திராபையாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர். அதனையடுத்து கிராஃபிக்ஸ் தரத்தை உயர்த்தும் பணியில் படக்குழு இறங்கியது. அதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தச் சூழலில் படத்தின் ப்ரீ பிஸ்னெஸ் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் நடந்திருப்பதாக புதிய தகவல் வெளியானது.
ஆதிபுருஷ் ட்ரெய்லர் 2: கடந்த ஆறாம் தேதி திருப்பதியில் ஆதிபுருஷ் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லரிலும் கிராஃபிக்ஸ் காட்சிகள் சுமாராக இருக்கிறதென்றே பலரும் கூறினர். இருப்பினும் ட்ரெய்லருக்கு ஒருதரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்து அதனை இணையத்தில் ட்ரெண்டாக்கினர். படம் வெளியாக இன்னும் ஐந்து நாள்களே இருப்பதால் படக்குழுவும் ப்ரோமோஷனில் இறங்கியுள்ளது. மேலும் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கியிருக்கிறது.
அனுமனுக்கு இருக்கை: இதற்கிடையே, ஆதிபுருஷ் படம் வெளியாகும் திரையரங்குகளில் ஒரு இருக்கை அனுமனுக்காக ஒதுக்கப்படும் என தெரிவித்தது. இதனையும் ரசிகர்கள் கடுமையாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழலில், விளக்கமளித்த இயக்குநர் ஓம் ராவத், சிறு வயதிலிருந்தே எங்கு ராமாயண நாடகம் நடந்தாலும் அங்கு அனுமன் நேரில் வருவார் என்ற ஐதீகம் பின்பற்றப்பட்டதாக அம்மா சொல்லியிருக்கிறார்.
அதனால்தான் இப்போது ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளீல் அனுமனுக்கு ஒரு இருக்கை இருக்கும்படி தயாரிப்பாளர் தரப்பிலிருந்து விநியோகஸ்தரிடம் கேட்டுக்கொண்டோம் என தெரிவித்திருந்தார்.
அனுமனுக்கு பக்கத்து இருக்கை விலை உயர்வு?: இந்நிலையில் அனுமனுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கைக்கு அருகில் இருக்கும் இருக்கையின் டிக்கெட் விலை இரண்டு மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது என்று புதிய தகவல் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அதுகுறித்து படத்தின் தயாரிப்பு தரப்பு எந்த விளக்கமும் அளிக்காமல் மௌனமாக இருந்தது.
தயாரிப்பு தரப்பின் விளக்கம்: இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்திய சூழலில் இதுகுறித்து தயாரிப்பு தரப்பு விளக்கம் அளித்திருக்கிறது. அந்த விளக்கத்தில், “ஆதிபுருஷ் டிக்கெட் விலை தொடர்பாக தவறான தகவல் பரவிவருகிறது. அனுமனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இருக்கைக்கு அருகில் இருக்கும் சீட்டுக்கான டிக்கெட் விலைக்கும் மற்ற சீட்டுகளின் டிக்கெட் விலைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை” என குறிப்பிட்டிருக்கிறது.