நாங்கெல்லாம் ராவான ரவுடிகள் என்பது போல கேரளாவின் கோழிக்கோட்டில் சாலையில் குத்துச்சண்டை போட்டவர்களை போலீஸார் கொத்தாக பிடித்து தூக்கிச் சென்றனர்.
மதுபோதையில் சாலையில் கட்டிப்பிடித்து உருண்டு புரண்டு மல்லுக்கட்டும் இவர்கள் தான் ரம்சாத், ரஷீத்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள ஊராட்சி உண்டு நகரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அரை நிர்வாணத்துடன் ஒருவர் சண்டைக்கு துள்ளிக் குதித்து தயாராகிறார். கலர்வேஷ்டி சட்டையில் களமிறங்கும் மற்றொருவர் களத்தில் இறங்கும் போதே எதிராளி விடும் குத்தை லாவகமாக தலையை திருப்பி தப்பித்துக் கொண்டே தன்னை தயார் படுத்துகிறார்.
ரெப்ரி இல்லாமல் எந்த விளையாட்டும் விளையாடக்கூடாது என்பது போல வரும் மற்றொருவர் இருவருக்கும் இடையில் நின்று கொண்டார். அப்போது, அவருக்கும் ஒரு குத்து விட்டார் அரை நிர்வாண அர்னால்டு.
சண்டைன்னு வந்துட்டாலே நம் மீது நாலு குத்து விழத்தான் செய்யும், அதுவும் நடுவர் என்றால் கூடுதலாக நாலு குத்தை வாங்கிக் கொள்ள வேண்டியது தான் என்பது போல மதுபோதையில் இருந்த அவரும் சண்டைக்கு ரெப்ரிங் செய்துக் கொண்டே இருந்தார்.
குத்துச்சண்டை வீரர்களாக மாறிமாறி குத்திக் கொள்வதும், பின்னர் திடீரென சிலம்பத்தில் கால்வரிசை வைத்து விளையாடுவது போல பின்னோக்கி இறங்குவது என்று வேடிக்கை காட்டியவர்கள் திடீரென மல்யுத்தத்தில் இறங்கி ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து சாலையில் உருளத் துவங்கினர்.
அவர்களை விலக்கி விட்ட இளைஞரை, நான் எதற்கு இங்கே நிற்கிறேன்?, நீ வேடிக்கை மட்டும் பார் என்பது போல நடுவர் வேலை செய்தவர் துரத்தியும் விட்டார்.
நீண்ட நேரமாக நடைபெற்ற சண்டை குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் இரண்டு பேரையும் ரவுண்டு கட்டி தூக்கிச் சென்றனர்.
விசாரணையில், அவர்கள் அதேப் பகுதியைச் சேர்ந்த ரம்சாத் மற்றும் ரஷீத் என்பதும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு அடிதடியில் முடிவடைந்தது தெரிய வந்தது. பொதுமக்களுக்கு இடையூறாக செய்ததாக இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.