Today is Child Labor Abolition Day | இன்று குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்

படிக்க வேண்டிய வயதில் ஆபத்தான வேலைகள் பார்க்கும் குழந்தைகளை பார்த்தாலே மனம் பதறுகிறது. இந்த பிஞ்சுகள் செய்த பாவம் தான் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது. இத்தகைய ‘குழந்தை தொழிலாளர்’ முறையை ஒழிக்கும் நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ‘குழந்தை தொழிலாளர் விநியோக சங்கிலியை ஒழிப்பது’ இந்தாண்டு மையக்கருத்து.


எது குழந்தை தொழில்

எந்த வேலை குழந்தையின் உடல்நிலை, மனம், கல்வி, சுதந்திரம், பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு பாதிப்பாக அமைகிறதோ? அதுதான் ஒழிக்கப்பட வேண்டிய குழந்தை தொழிலாளர் முறை. கடினமான வேலைகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கல்வி தான் கற்க வேண்டும். விடுமுறை மற்றும் ஓய்வு நேரங்களில் பார்க்கும் சிறிய வேலைகள் ஆகியவை தவறில்லை. இது அவர்களின் முன்னேற்றத்துக்கு தான் வழிவகுக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ளது.


எத்தனை பேர்

உலகளவில் 21.5 கோடி குழந்தைகள், முழுநேர தொழிலாளர்களாக உள்ளனர். அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், மற்ற குழந்தைகளை போல விளையாட முடியாமலும் கஷ்டப்படுகின்றனர். போதிய உணவும் கிடைப்பதில்லை. இவர்கள் குழந்தைகளாகவே இருப்பதற்கு கூடிய வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதிலும் கொடுமையான விஷயம் என்னவெனில் சிலர் மோசமான சுற்றுச்சூழல் இடங்களிலும், கொத்தடிமைகளாகவும் ஆண்டுக்கணக்கில் வேலை வாங்கப்படுகின்றனர். போதைப்பொருள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இக்குழந்தைகளை ஈடுபடுத்துகின்றனர்.


இந்தியாவில் அதிகம்

2011 சென்சஸ் படி 5 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கையில் 3.53 கோடி பேர் தொழிலாளர்களாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் கிராமங்களில் உள்ளனர். 2001ல் ஒப்பிடும்போது 20 சதவீதம் குறைவு. 7 முதல் 14 வய துக்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களில் 3ல் ஒரு குழந்தைக்கு அவர்களது பெயரை கூட எழுத தெரியாது. நாட்டில் உ.பி., பீகார், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகியவை குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையில் முதல் 5 இடத்தில் உள்ளன. நிலக்கரி சுரங்கம், விவசாயம், தீப்பெட்டி. செங்கல் சூளை, டெக்ஸ்டைல், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் குறைந்த ஊதியத்தில், ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலைபார்க்கின்றனர். வார விடுமுறையின்றி அனைத்து நாட்களிலும் கொத்தடிமைகள் போல வேலை பார்க்கின்றனர்.


எது தீர்வு

பெரும்பாலான குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாக தான், கட்டாயமாக வேலைக்கு அனுப்பப் படுகின்றனர். எனவே முதலில் பெற்றோர்களின் வருமானத்துக்கு வழி செய்ய வேண்டும். வறுமை ஒழிந்தால், குழந்தைகள் கல்வி கற்பது அதிகரிக்கும். இதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றலாம். இந்த நல்ல பணியை இன்றே துவக்குவோம். குழந்தை செல்வங்களை பாதுகாப்போம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.