கோவை திமுக 20 வது வார்டு வட்ட துணைச் செயலாளராக இருப்பவர் அன்னபூரணி. இவர் தங்கள் பகுதியில் புதர் மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்ய திமுக கவுன்சிலர் மரியராஜ் என்பவரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், வேலை நடக்காததால் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் உதவியுடன் அந்தப் பகுதியை அன்னபூரணியே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மரியராஜ் மற்றும் அவர் ஆதரவாளர்கள் அன்னபூரணியை பொதுவெளியில் தாக்கியுள்ளனர். மேலும் அடியாட்களுடன் வந்து தகாத வார்த்தைகளில் திட்டி அன்னபூரணிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து மரியராஜ் ஆதரவாளர்களை திட்டி அன்னபூரணி கதறி அழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தத் தாக்குதலின் போது அன்னபூரணியின் ஆடை கிழிந்ததாகவும், மரியராஜின் குடும்ப உறுப்பினர்களும் அவரை தகாத வார்தைகளில் திட்டியதாக புகார் எழுந்துள்ளது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்னபூரணி இதுகுறித்து சரவணம்பட்டி காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
ஆனால் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் புகார் தொடர்பாக விளக்கம் கேட்க மரியராஜ்க்கு தொடர்பு கொண்டோம். அவரின்து எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.