அதிமுகவுடன் இருந்து வந்த கருத்து மோதல் டெல்லி பஞ்சாயத்துக்கு பிறகு சற்று ஓய்ந்துள்ள நிலையில், ஜெயலலிதா குறித்து பேசி மீண்டும் விமர்சனத்தில் சிக்கியுள்ளார் அண்ணாமலை.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை கூறியது; தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் ஊழல் வழக்கில் கைதாகி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஒரு முதல்வரே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால்தான் தமிழ்நாடு அதிக ஊழல் செய்த மாநிலமாகிவிட்டது என கூறினார். இது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலையால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகை காயத்ரி ரகுராம் ‘ ஜெயலலிதா இறந்துவிட்டதாலும், அவர் பிராமணராக இருப்பதாலும் அண்ணாமலை விமர்சித்திருப்பதாக’ சாடியுள்ளார். இதுகுறித்து காயத்ரியின் ட்வீட்டில் ‘தமிழகத்தை அவமதிக்கும் ஜோக்கர். தமிழ் தாய் வாழ்த்து பாடலை அவர் அவமரியாதை செய்த போது இதை நாம் அனைவரும் அறிவோம். அவருக்கு இந்த மண்ணின் மீது மரியாதை இல்லை. முன்னாள் முதல்வர் ஜே.ஜே.அம்மா இறந்துவிட்டதாலும், அவர் பிராமணராக இருப்பதாலும், எந்த சமூகமும் அவருக்கு ஆதரவளித்து போராடாது ஜே.ஜே.அம்மா வேறு சமூகமாக இருந்தால் அண்ணாமலை அடித்து நொறுக்கப்படுவார்.
மற்ற கட்சிகள் மீதும், சொந்த பாஜக மக்கள் மீதும் பல ஐடி ரெய்டுகள் மற்றும் இடி நடவடிக்கைகள் உள்ளன ஆனால் ஒரு கைது கூட இல்லை. ஜே.ஜே. அம்மா ஒரு பெண் என்பதால், இறந்த உடல் மீது இவ்வளவு தைரியம் உள்ளதா அண்ணாமலைக்கு? அவருக்காக பேச யாரும் இல்லை என்று நினைக்கிறீர்களா? பாஜக உலகின் பணக்கார கட்சி, எப்படி? ஊழல் இல்லாமல்? 24 பிரபலங்கள் மட்டுமே ஒரு நெருக்கமான கூட்டத்தில் கலந்து கொண்டனர், கடைசி நிமிடத்தில் பல பிரபலங்கள் கைவிட்டனர்.
பொதுக் கூட்டத்தில் மக்கள் கலைந்து செல்லத் தொடங்கினர். அண்ணாமலை அமித் ஷாஜியை எல்லா வழிகளிலும் அவமதித்துள்ளார். அவரது சந்திப்புகள் சென்னையிலோ அல்லது தமிழ்நாட்டிலோ எந்த இடத்திலும் இது போல் நடந்ததில்லை. இந்த முழு சந்திப்பு ஏற்பாடும் பெரும் தோல்வியில் முடிந்தது. சமூக வலைதள ட்ரெண்டில் #GoBackModi என்று திமுக சொல்வது வழக்கம்.
இப்போது இந்த முறை அண்ணாமலை உண்மையில் #GoBackAmitShah இல் வெற்றி பெற்றுள்ளார்’ என காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். முன்னதாக அமித் ஷாவின் வருகை குறித்து பேசியிருந்த அண்ணாமலை, அமித்ஷா தமிழக மண்ணிற்கு வருகிறார் என்றதுமே ஸ்டாலினுக்கு நேற்றுமுதல் காய்ச்சல் அடிக்க தொடங்கிவிட்டது. அமித்ஷா வரும்போது மின்சாரத்தை வேண்டுமானாலும் அணைக்கலாம். ஆனால் தொண்டர்களின் உற்சாகத்தை அணைக்க முடியாது’ என கூறினார்.