சென்னையைச் சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரன் மற்றும் மருத்துவரான விபூஷ்னியா ஆகியோருக்கு, ஜூன் 1 அன்று பூந்தமல்லியில் திருமணம் நடைபெற்றது. தங்கள் தேனிலவுக்காக இருவரும் இந்தோனேசியாவின் பாலி பகுதிக்குச் சென்றனர். அங்கு வேகமாகச் செல்லும் படகு சவாரியில் செல்ல விரும்பியதோடு, போட்டோஷூட் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், இவர்களின் எண்ணம் சோகத்தில் முடிந்துள்ளது.
அந்த படகுச் சவாரியில் செல்லும்போது போட்டோஷூட் எடுக்க நினைத்தவர்கள் நீரில் மூழ்கி இறந்துள்ளனர். படகு கவிழ்ந்து, இவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. லோகேஸ்வரனின் உடல் வெள்ளிக்கிழமையன்றும், விபூஷ்னியாவின் உடல் சனிக்கிழமையன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் சடலங்களைச் சென்னைக்குக் கொண்டு வர குடும்பத்தினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சடலங்களைக் கொண்டு வர, தமிழக அரசு மற்றும் மத்திய அரசை குடும்பத்தினர் தொடர்பு கொண்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் இருந்து சென்னைக்கு வர நேரடி விமானங்கள் இல்லாததால், மலேசியாவிற்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.
புதிதாகத் திருமணமான மருத்துவ தம்பதிகள், தேனிலவுக்குச் சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.