புதுடெல்லி: பிப்பர்ஜாய் புயல் மிகவும் அதிதீவிரமடைந்துள்ள சூழ்நிலையில், இன்று (ஜூன் 12) பிற்பகலில் அது குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தநிலையில் கட்ச் கடற்கரைப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிப்பர்ஜாய் அதிதீவிரப் புயல், குஜராத்தின் கட்ச் பகுதிக்கும் பாகிஸ்தானின் கராச்சி பகுதிக்கும் இடையில் வியாழக்கிழமை (ஜூன் 15) கரையைக் கடக்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் குஜராத் மாநிலத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிரா பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில், “புதன்கிழமை வரை கட்ச், சவுராஷ்ரா கடல் பகுதிகளில் அலைகளின் வேகம் மிகவும் அதிகமாக இருக்கும். வியாழக்கிழமை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கட்ச், ஜாம்நகர், மோர்பி, கிர் சோம்நாத், போர்பந்தர், மற்றும் தேவபூமி துவாரகா மாவட்டங்களில் ஜூன் 13 முதல் 15ம் தேதி வரை சுமார் 150 கி.மீ. வேகத்தில் காற்றும் அதிக மழையும் பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கட்ச், சவுராஷ்டிரா மாவட்டத்தில் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை உயர்வான இடங்களுக்கு இடமாற்றம் செய்து வருகின்றனர். கட்ச் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில், அதிகமான மக்கள் கூடுவதைத் தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பாட்டீல், கடலோர மாவட்டங்களில் ஏற்பட இருக்கும் அவசர நிலையைச் சமாளிக்க முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று ஆய்வு செய்தார். அதிக அலைகள் காரணமாக, குஜராத் மாநிலம் அரபிக் கடல் பகுதியில் இருக்கும் மிகவும் பிரபல சுற்றுலா தளமான குஜராத்தின் வல்சாத் பகுதியின் திதால் கடற்கரைக்கு சுற்றலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
மேலும் குஜராத், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவுகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசுகள் நிலையமையினைத் தொடர்ந்து கண்காணித்து தேவைக்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுக்கும் படியும் எச்சரிக்கையுடன் இருக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளது.
சர்வதேச கடல்சார் சட்டத்தின் படி, வரவிருக்கும் புயல் பாதிப்புகளைக் கப்பல்களுக்கு தெரிவிக்கும் வகையில் புயல் எச்சரிக்கைச் சின்னங்களை ஏற்றும்படி துறைமுகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான கடல்சார் நடவடிக்கைகளுக்காகவும், கப்பல்கள் மற்றும் அதன் பணியாளர்களின் நலனுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இதனிடேயை அரபிக்கடலில் வீசும் பிப்பர்ஜாய் புயல் காரணமாக மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால் மும்பையில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, சில தாமதமாகின.
பாகிஸ்தான் அரசும், சிந்து மற்றும் பாலோசிஸ்தானில் உள்ள அதிகாரிகளுக்கு எச்சரிக்கையுடன் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. மேலும், சிந்து மற்றும் மக்ரான் பகுதிகளில் ஜூன் 13-ம் தேதி இரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலுக்கு பிப்பர்ஜாய் என்று வங்கதேசம் பெயர் வைத்துள்ளது. வங்க மொழியில் இந்தப் பெயருக்கு பேரழிவு என்று பொருள்.