கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் திமுக மிக முக்கியமாக தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியோடு தேர்தலை சந்தித்தது. நீட் தேர்வு ரகசியம் தனக்குத் தெரியும் எனவும், அப்போதைய ஆட்சியாளர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லாததால் நீட் தேர்வை அனுமதித்துள்ளதாக தற்போதைய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அப்போது விளையாட்டாக கூறியிருந்தார்.
அதன் பிறகு சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி பிடித்த திமுக நீட் தேர்வு விலக்கு பெற முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்படாமல் தற்பொழுது கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பொய் வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த திமுக அதன் மீது அக்கறையில்லாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரியின் 187 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் “மருத்துவ படிப்புகளுக்கு இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
பொது கலந்தாய்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும். அதிக அளவில் மருத்துவக் கல்வி இடங்களை வைத்துள்ள தமிழகத்தில் தமிழர்கள் அல்லாத பிற மாநிலத்தவர்கள் பயன்பெறுவர். இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு தான். நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்க தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது” என தெரிவித்துள்ளார்