“சத்யராஜ் சார் கிட்ட கேட்காத கேள்வியை, என்கிட்ட மட்டும் கேக்குறாங்க!" -நடிகை ரோகிணி நேர்காணல்

ஆனந்த விகடன் யூ-டியூப் சேனலில் `கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா’ நிகழ்ச்சியில் நடிகை, எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் ரோகிணி கலந்துகொண்டு தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

தற்போது, திரைப்படத்துறையில் கருத்து சுதந்திரத்திற்கான இடம் உள்ளது என நம்புகிறீர்களா?

கருத்துச் சுதந்திரத்திற்கான இடம் இருக்கு. ஆனா, சில விஷயங்களால அது நசுக்கப்படலாமோ என்கிற ஒரு அச்சமும் இருக்கு. சென்சார் இப்ப எல்லாத்தையும் மாற்றக்கூடிய இடத்திற்கு போகுது. ‘தணிக்கை செய்யப்பட்ட படங்களையும், திரும்பி மறுதணிக்கை செய்யலாம்’- இப்படியொரு விதிமுறை வரப் போகுது. இதற்கு நாம எல்லாருமே சேர்ந்து குரல் கொடுக்கக் வேண்டிய இடத்துல இருக்கோம். இது இப்போது எடுக்கப்பட்ட படங்களுக்கு மட்டும் கிடையாது. இதற்கு முன்பு எடுக்கப்பட்ட படங்களுக்கும் பொருந்தும். அப்படி பார்த்தால், `பராசக்தி’ திரைப்படத்தைக்கூட மறுதணிக்கைக்கு உட்படுத்தலாம். இந்த மாதிரியான ஒரு காலகட்டத்திற்குள்ள தான் நாம நுழைகிறோம். இதுதான் நாம எல்லோரும் ரொம்ப ஜாக்கிரதையா, கவனமா இருக்க வேண்டிய காலகட்டம். 

நடிகை ரோகினி நேர்காணல்

சமீப காலங்களில் வரலாற்றுப் பதிவுகளாக புனைக்கதைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய இளைய சமுதாயம் அதை வரலாற்றுப் படமாகவே  நினைக்கிறார்கள். ‘வரலாற்று கதைக்களம்’ என்கின்ற பார்வையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எப்படி பாக்குறீங்க?

‘பொன்னியின் செல்வன்’ வரலாற்றை சித்தரிக்கின்ற படம் இல்லை. இது வரலாற்றுல இருந்து விலகி இருக்குற கதைதான். வரலாற்றில் இருந்த ஒரு சில கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு, நந்தினி மாதிரியான ஒரு புனைவு கதாப்பாத்திரங்களை வைத்துக்கொண்டு அந்த நேரத்தில் எழுதப்பட்டது. அது எல்லாருடைய கவனத்தையும், என்னுடைய கவனத்தையும் ரொம்பவே ஈர்த்தது. ரொம்ப ரசிச்சு படிச்ச ஒரு கதை. இன்றைக்கு சோசியல் மீடியாவ எவ்வளவுதான் கடிஞ்சுக்கிட்டாலும், அதுல எல்லாத்தையுமே புட்டு புட்டு வச்சிடுறாங்க. ‘இது வரலாறு கிடையாது, வரலாற்று உண்மை கிடையாது.’ இந்த மாதிரி எத்தனையோ பதிவுகளை நான் பார்த்திருக்கேன். குறிப்பா, ‘பொன்னியின் செல்வன்’ வந்ததுக்கு அப்புறம், ‘ஆதித்த கரிகாலனை யார் கொன்றாங்க?’ என்பதை சான்றுகளோட முன் வச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. இதுல புழங்கிக்கிட்டு இருக்கவங்க தான், நம்ம  இளைய சமுதாயம். இத பத்தி, அவங்களுக்குள்ள ஒரு சின்ன சந்தேகத்தை ஏற்படுத்திக் கொடுத்துட்டாங்க. சோசியல் மீடியானால இன்னைக்கு சின்ன அச்சம் இருக்கு. ‘அடுத்த தலைமுறை, இத உண்மைன்னு நெனச்சுட போறாங்கன்னு’ எனக்கும் இந்த பயம் இருக்கு. இத சரி செய்யுறதுக்காகவே சில பேர், அத்தாட்சியோட வெளிக்கொண்டு வந்துட்டு இருக்காங்க. கல்வெட்டுகள், செப்பேடுகள்ல இருக்குறத மொழிபெயர்த்து, ‘இது தான் நடத்திருக்கிறது. இதுல சொன்னது கதை’ என வலியுறுத்திட்டு வர்றோம். ‘இது புனைவு தான்’ அப்படின்னு மணிரத்னம் சார் நிறைய எடத்துல சொல்லிருக்காரு. நாமளும் அததான் சொல்றோம்.

‘யாத்திசை’ திரைப்படம் பார்த்திருப்பீங்க. அதைப்பற்றி சொல்லுங்க?

‘யாத்திசை’ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம். சமீப காலத்துல வந்திருக்கிற, ஒரு தைரியமான, ட்ரெண்ட் செட்டராகக் கூடிய ஒரு படம்ன்னு நான் சொல்லுவேன். இந்த படத்தோட இயக்குநரைச் சந்திச்சு நான் வாழ்த்து சொன்னேன். ‘யாத்திசை’ படத்தில் காண்பிச்ச அனைத்தையும், ரொம்ப ரொம்ப மெனக்கெடுதலோட ஆய்வு செஞ்சிருக்காங்க. ‘அந்தக் காலகட்டத்துல, இப்படிப்பட்ட வாழ்க்கை முறை தான் இருந்திருக்கக்கூடும்,’ என உண்மைக்கு மிக மிக அருகில் போயிருக்கின்ற ஒரு படைப்பாக நான் இதைப் பாக்குறேன். இதுக்காக அவருக்கு முதல்ல வாழ்த்து சொல்லிடணும். இந்தப் படத்தோட இயக்குநர், கதைக்கு துணையாக ஆய்வாளர்களை கலந்தாலோசித்து எடுத்திருக்கிறார். இது ஒரு அற்புதமான படைப்பு. அற்புதமான முன்னெடுப்புன்னு நினைக்குறேன். அந்த படத்தோட இயக்குநர் சொன்னது மிக மிக முக்கியமானது. `அதிகாரம் என்பது நம்மளை என்ன மாதிரியாக மாற்றுகிறது? போருக்குப் பின்புலத்துல இருக்கிறது என்ன?’ என்பதைப் பற்றி ஒரு குரல் எழுப்பிருக்காரு. இது மிக முக்கியான ஒரு விஷயமாகக் கணக்குல எடுத்துக்க வேண்டி இருக்கு. இது இன்றைக்கும் பொருந்தக்கூடியதாக இருக்குல்ல.

நடிகை ரோகினி நேர்காணல்

சமூக செயற்பாட்டாளர், நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடலாசிரியர் என பல துறைகளில் பணியாற்றுகிறீர்கள். இந்த சமூகம் உங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என நீங்கள் நினைக்கிறீர்களா?

இல்ல, அப்படி சொல்ல மாட்டேன். பயன்படுத்திக் கொள்வது என்பது ஒரு பதவியை கொடுப்பது கிடையாது. இல்லைன்னா, ஏதாவது ஒரு பட்டம் கொடுக்குறது கிடையாது. நான் ஒரு விஷயம் சொன்னேன்னா, எல்லாரும் அதை ரொம்ப சீரியஸா பாக்குறாங்க. இந்த மாதிரியான ஒரு நம்பிக்கையை அவ்வளவு எளிதாக யார் மீதும் இந்த சமூகம் வச்சிடாது. இந்த நம்பிக்கையை என் மேல வைக்குறது தான், எனக்கு கொடுத்திருக்கிற மிகப்பெரிய அங்கீகாரம்ன்னு நான் நினைக்குறேன். அந்த நம்பிக்கை, ஒரு முக்கியமான பொறுப்பையும் எனக்கு அளிக்குது. நான் இந்த மாதிரி தான் இருக்கமுடியும். வேற எந்த மாதிரியும் இருக்கமுடியாது. இப்போ சினிமா துறையிலேயே ஏதாவது ஒரு விஷயம் நடக்கும்போது, அதற்கு குரல் எழுப்ப முதல்ல என்கிட்ட வருவாங்க. இலங்கைப் பிரச்சனை, ஜல்லிக்கட்டு பிரச்னை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என இதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்குறதுக்கு ‘நீங்க வாங்க’-ன்னு என்னைய கூப்பிடுவாங்க. ‘நான் என்ன சாதிச்சுட்டேன்’ என்னைய கூப்பிடுறாங்கன்னு பார்த்தா, ஒண்ணுமே கிடையாது. யாருக்காக நிற்கிறோம் என்பது மட்டும்தான் எல்லோருடைய கண்களிலும் பார்வையிலும் இருக்கு. 

`விட்னஸ்’ மாதிரியான படத்துலயும் நடிக்கிறீங்க. இடஒதுக்கீட்டை எதிர்க்கின்ற, `என்னங்க சார் உங்க சட்டம்’ படத்துலயும் நடிக்கிறீங்களே எப்படி?

அது ஒரு தவறுதலான முடிவுதான். கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா நடிக்கிறவங்களுக்கு முழு கதையும் சொல்ல மாட்டாங்க. ‘முழு கதையையும் நான் கேக்கணும்’- இதுதான் அதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம். அந்தப் படத்துல என்னுடைய போர்ஷன் மட்டும் தான் சொல்லப்பட்டது. அந்த போர்ஷன்ல என்னுடைய கதாபாத்திரத்தை எடுத்துக்கிட்டோம்னா, ‘ஒரு பிற்படுத்தப்பட்ட இடத்துல இருந்து வர்ற ஒரு பையனுக்கு, நேர்காணலுக்கு வர முடியாத சூழ்நிலை. காணொளியின் மூலமா முதல்வர் எதையாவது திறந்து வைக்கலாம்னா, ஒரு காணொளி மூலமா இன்டர்வியூ பண்ணலாம்.’ அப்படின்னு என்னுடைய கேரக்டர் தான் இந்த இலக்கணத்தை உடைச்சி அதை சாத்தியப்படுத்துது. அது மட்டும்தான் நான் பார்த்தேன். ‘இந்த மாதிரி டெலி இன்டர்வியூ பண்ணலாம். அதுல பிற்படுத்தப்பட்ட அந்த பையனுக்கு வாய்ப்பு கிடைக்குது. அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.’ இதுதான் எனக்கு சொல்லப்பட்ட கதை. ஆனா, நான் அங்க போனதுக்கு அப்புறம் ஒரு ரெண்டு டயலாக்ஸ் பேச வச்சாங்க.

ரோகிணி

இதை இப்படி சொல்லுறது எனக்கு சரி வராதுன்னு தோணுது, ஏன் இப்படி வைக்கிறீங்கன்னு இதை பத்தி நிறைய பேசுனேன். ஆனா ஒரு இயக்குநர் சொல்ற பேச்சைத்தான், நாம ஒரு ஆர்ட்டிஸ்ட்டா கேட்டுக்கணும். அந்த இடத்துல, சரின்னு ஷூட்டிங் முடிச்சுட்டு வந்துட்டேன். ஆனா முதன்மைப்படுத்தப்பட்டது என்னவோ, அந்த டயலாக் மட்டும்தான். அந்த இயக்குநர் இதை கால்குலேட் பண்ணி செஞ்சிருக்காருன்னு தான் எனக்குப் பட்டுச்சு. ‘லவ் டுடே’ படத்துல சத்யராஜ் சார், பயங்கர ஆன்மீகவாதியா நடிச்சிருக்காரு. ‘சார் நீங்க பெரியாரிஸ்ட். வெளிய பெரியார் பத்திப் பேசுறீங்க. ஆனா இங்க நாமம் வைக்கிறதைப் பத்தி பேசுறீங்க?’ இப்படி அவரை நாம கேள்வி கேக்குறோமான்னா, இல்ல. என்னைய மட்டும் கேள்வி கேக்குறாங்க. இப்படி இருக்கும்போது, எங்கையோ ஒரு இடத்துல என்னைய ரொம்ப நம்புறாங்கன்னு அந்த படத்துக்கு பிறகு புரிஞ்சுகிட்டேன். இப்போ முழு கதையையும் கேட்ட பிறகு தான், நடிச்சிட்டு வர்றேன்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.