தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கேழ்வரகு வழங்கும் திட்டம் சமீபத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இது ஒவ்வொரு மாவட்டமாக படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரை கூட்டுறவுத்துறை சார்பில் கிராம, நகர்ப்புறங்களில் 456 நியாய விலைக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் 32 முழு நேர நியாய விலைக் கடைகள், 10 பகுதி நேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 1,082 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்இவற்றில் 4,68,320 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. அதில் கேழ்வரகு பெற தகுதி பெறும் குடும்ப அட்டைகள் 4,53,679 ஆகும். அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தங்களின் விருப்பத்தின் பேரில் 18 கிலோ அரிசி, 2 கிலோ கேழ்வரகு என 20 கிலோ உணவுப் பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம். இந்நிலையில் அதியமான்கோட்டை நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு விநியோகத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தி ஐஏஎஸ் முன்னிலையில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஜூன் 12) தொடங்கி வைத்தார்.சிறுதானிய மாவட்டமாக தேர்வுஇந்த விழாவில் பேசிய அமைச்சர், தமிழக முதலமைச்சர் அவர்கள் வேளாண் பெருமக்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் சிறுதானிய மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு சிறு மற்றும் குறு விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நேரடி கொள்முதல் நிலையம் திறப்புதருமபுரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் 2 கிலோ அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்க ஏதுவாக நேரடி கொள்முதல் நிலையம் கடந்த ஜனவரி 21 அன்று தருமபுரி, அரூர், பென்னாகரம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 31ஆம் தேதி முடிய 32.150 மெட்ரிக் டன் கேழ்வரகு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
மானிய உதவிமேலும் சிறுதானியங்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய ஏதுவாக சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய உதவி அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.வருவாய்த் துறை ஏற்பாடுஇந்த விழாவில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 175 பயனாளிகளுக்கு 1.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், குடும்ப அட்டைகள், திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய உதவித்தொகை, மாற்று திறனாளி உதவித்தொகை, தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை, விதவை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.