பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்து பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையின் அந்த பேட்டியில், தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்று தெரிவித்திருந்தார்.
அண்ணாமலையின் இந்தப் பேச்சுக்கு அதிமுக சார்பில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இன்று பேட்டியளித்திருந்தார்.
இந்நிலையில், ஜெயக்குமாரின் பேச்சுக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜகவின் கரு நாகராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பில், “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் வரம்பு மீறிய பேச்சை பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்.
அண்ணாமலையின் பேட்டியை ஒழுங்காக படிக்காமல் ஜெயக்குமார் பிதற்றுகிறார். ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பதில் தொடக்கத்திலிருந்து உறுதியாக இருப்பவர் அண்ணாமலை.
உலகில் மிகப்பெரிய ஒரு அரசியல் இயக்கத்தை, 19 கோடி உறுப்பினர்கள் கொண்ட ஒரு இயக்கத்தை செடியென ஜெயக்குமார் விமர்சிப்பதை ஏற்க முடியாது” என்று கரு நாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.