தனுஷ்கோடி : இலங்கைக்கு கடத்தப்பட்ட 1 டன் பீடி இலைகள் – கடலோர போலீசார் பறிமுதல்.!!
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு வகையான போதைப் பொருட்கள், பீடி இலைகள், ரசாயனப் பொடிகள் உள்ளிட்டவை கடத்துவது ஒரு
தொடர்கதையாக உள்ளது. இதே போன்று அங்கிருந்தும் தமிழகத்திற்கு கிலோ கணக்கில் தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியில் பீடி இலை மூட்டைகள் மிதப்பதாக மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி போலீசார் அப்பகுதிக்கு விரைந்துச் சென்று, கடலில் மிதந்த 15 மூட்டை பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் இருந்து மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்திய போது பாதுகாப்பு படையினர் ரோந்து வந்ததால் அவர்களிடம் இருந்து தப்பிக்கும் போது கடத்தல்காரர்கள் இவற்றை கடலில் போட்டுவிட்டு தப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீசார் கடலில் மிதந்து வந்த சுமார் 1 டன் எடைகொண்ட பீடி இலைகளை கடத்தியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.