உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முன் தினம் தமிழகம் வந்தார். அன்று இரவு கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கிய அவரை பல்வேறு பிரபலங்கள் சந்தித்து பேசினர். மறுநாள் காலையும் அவரை பலர் சந்தித்தனர். ஞாயிற்றுக் கிழமை கோவிலம்பாக்கத்தில் பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா பேசினார். அதைத் தொடர்ந்து ஹெலிகாஃப்டர் மூலம் வேலூர் சென்ற அவர் பாஜகவின் 9ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
மோடியை சந்திக்க வாய்ப்பு மறுப்பு!பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா ஆகியோர் சென்னை வரும் போதெல்லாம் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளது குறித்த தகவல் வெளியாகும். சமீபத்தில் சென்னை வந்த மோடியை சந்தித்துப் பேச இருவரும் முயற்சித்த நிலையில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
அமித் ஷா சந்திப்பை புறக்கணித்தாரா எடப்பாடி?இம்முறை அமித் ஷாவை சந்திக்க வாய்ப்பு இருந்தும் ஓபிஎஸ், இபிஎஸ் உடனான சந்திப்பு நடைபெறவில்லை. அமித் ஷாவை சில வாரங்களுக்கு முன்னர் டெல்லி சென்று சந்தித்து வந்தார் எடப்பாடி பழனிசாமி. எனவே இப்போது அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று அதிமுக வட்டாரத்தில் கூறுகின்றனர்.
ஓபிஎஸ்ஸுக்கு சிக்னல் இல்லை!ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் அமித் ஷாவை சந்தித்து பேச தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த சூழலில் அங்கு சென்றால், இரு தரப்பையும் அமித் ஷா சேர்த்து வைக்க முயற்சிக்கிறார் என்று செய்திகள் பரவும். அது ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக அமையும். எனவே எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை சந்திப்பதை தவிர்த்துள்ளார் என்று கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் ஓபிஎஸ்ஸை மட்டும் சந்தித்தால் கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்பதால் ஓபிஎஸ்ஸுக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லையாம்.
அதிமுகவை உரசிப் பார்க்கும் அண்ணாமலைஅதுமட்டுமல்லாமல் அமித் ஷாவின் வருகையை முழுக்க முழுக்க பாஜக நிகழ்ச்சிகளாகவே கொண்டு செல்ல அண்ணாமலை திட்டமிட்டு அதை செய்தும் காட்டியுள்ளார் என்கிறார்கள். தென் சென்னை, வேலூர் என்று அமித் ஷாவின் நிகழ்ச்சிகள் மற்றும் 25 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்ற பேச்சு ஆகியவை அதிமுகவை உரசிப் பார்க்கும் வகையில் அமைந்ததை அண்ணாமலை தரப்பு ரசிக்கிறதாம்.
இரட்டை இலக்கத்தில் பாஜக?
2019 மக்களவைத் தேர்தலைப் போல ஐந்து தொகுதிக்குள் பாஜகவை சுருக்கிவிட முடியாது. இரட்டை இலக்கத்தில் போட்டியிடுவது மட்டுமல்லாமல் இரட்டை இலக்கத்தில் பாஜகவுக்கு வெற்றி இருக்க வேண்டும் என்ற இலக்குடன் அண்ணாமலை காய் நகர்த்தி வரும் நிலையில் கடந்த இரண்டு நாள்கள் நிகழ்வு அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.