சென்னை: Happy Birthday GV Prakash (பிறந்தநாள் வாழ்த்துகள் ஜிவி பிரகாஷ்) இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மன்னர், ஞானி, புயல், தென்றல், வசந்தம் என பல இசையமைப்பாளர்களை கோலிவுட் கண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தனித்துவமிக்கவர்கள்தான். அதனால்தான் அவர்களால் இசையமைப்பாளராக ஜொலிக்க முடிகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஜிவி பிரகாஷ். சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என 7 வயதில் பாட ஆரம்பித்தவர் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களிடம் அசிஸ்டெண்ட்டாக வேலை செய்தார்.
அறிமுகம்: இப்படிப்பட்ட சூழலில் வசந்தபாலன் இயக்கத்தில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகும்போது அவருக்கு வயது 17. ஏ.ஆர்.ரஹ்மானின் உறவுக்கார பையன் என்ற அடையாளத்தோடு அறிமுகமானாலும் வெயில் படத்தின் இசையை கேட்ட பிறகு ஜிவி பிரகாஷின் உறவுக்காரர் ஏ.ஆர்.ரஹ்மான் என ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்தனர். ஏனெனில் அந்தப் படத்தில் அவர் அமைத்த இசை அப்படி.
பக்கா இசை: வெயில் படத்துக்கு இசையமைப்பது சாதாரணமில்லை. அதிலும் 17 வயதில் அவ்வளவு எமோஷனல் வெயிட்டேஜான கதைக்கு இசையமைக்க ஒருவரால் முடியும் என்றால் அவர் இசையை நன்கு உணர்ந்திருக்க வேண்டும். அதைத்தான் ஜிவி பிரகாஷ் செய்தார். படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு எமோஷனை கொடுக்கும். குறிப்பாக இறைவனை உணர்கிற தருணம் இது பாடலை இப்போது கேட்டாலும் முருகேசனின் வலியை நாம் உணரலாம்.
வெற்றி கூட்டணி: ஒரு இசையமைப்பாளர் வெல்வதற்கு இசை எவ்வளவு முக்கியமோ அதேபோல் பாடலாசிரியரும் முக்கியம். அப்படி ஜிவி பிரகாஷுக்கு வாய்த்தவர்தான் நா. முத்துக்குமார்.அதுவரை யுவன் ஷங்கர் ராஜாவுடன் மேஜிக் செய்துகொண்டிருந்த நா.மு வெயில் மூலம் ஜிவி பிரகாஷுடனும் மேஜிக் செய்ய ஆரம்பித்தார். அப்படி அவர்கள் கூட்டணியில் உருவான கிரீடம், மதராசப்பட்டினம், தாண்டவம், உதயம் என்.ஹெச்.4, தலைவா,தெய்வத்திருமகள் என அவர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் எல்லாம் க்ளாசிக் ரகம்.
பூக்கள் பூத்த தருணம்: இருவர் கூட்டணியில் ஏராளமான பாடல்கள் ரசிகர்களின் ஃபேவரைட் என்றாலும் மதராசப்பட்டினத்தின் பூக்கள் பூக்கும் தருணம் பாடலை எப்போது கேட்டாலும் ஒரு காதல் பூக்கும் தருணத்தை நாம் உணரலாம். தான தோம்தனன என ஜிவி இசையில் ஆரம்பிக்க, பூக்கள் பூக்கும் தருணம் என நா.முத்துக்குமார் இணைந்துகொள்ள அந்தப் பாடல் முழுக்க முழுக்க ஒரு ரம்யம்.அதைத் தாண்டி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
பிஜிஎம் கிங்: அதேபோல் வெறும் பாடலுக்கான இசையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு இசையமைப்பாளரால் நிலைக்க முடியாது. முக்கிய தேவை பின்னணி இசை. அதில் ஜிவி பிரகாஷ் தாள கில்லாடி. உதாரணமாக தெய்வத்திருமகள் படத்தின் க்ளைமேக்ஸில் வசனமே இருக்காது. கிருஷ்ணாவும் (விக்ரம்), நிலாவும் (சாரா) சைகையால் பேசிக்கொள்ளும் காட்சிதான். அங்கு ஜிவி பிரகாஷ் தனது பின்னணி இசை மூலம் வசனம் எழுதியிருப்பார். வசனமே இல்லாத அந்த சீனை பார்க்கும்போதெல்லாம் கண்ணீர் வரும். எனில், அவரது இசை ரசிகர்களை அந்தக் காட்சிக்குள் கனெக்ட் செய்திருக்கிறது என்று அர்த்தம்.
ஆயிரத்தில் ஒருவன்: ஜிவி பிரகாஷின் ஒவ்வொரு பின்னணி இசையும் தரம் வாய்ந்தது. அதை தனது முதல் படமான வெயிலிலேயே நிரூபித்துவிட்டாலும் ஒவ்வொரு படத்துக்கும் அதனை மெருகேற்றிக்கொண்டே சென்றார். செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜிவி பிரகாஷின் இசை எல்லாம் சர்வதேச தரம் வாய்ந்தது. அதேபோல்தான் மயக்கம் என்ன படத்திலும். குறிப்பாக அந்த இடைவேளை காட்சியில் சுந்தர் காலிங் என்று வந்தவுடன் ஜிவி பிரகாஷ் அமைத்த பின்னணி இசை அதிசயத்தின் உச்சம்.
அந்த இசை சோர்ந்து போனவனை தட்டி எழுப்பும், ஒருவனை குற்ற உணர்ச்சியில் தள்ளும், ஒருவனை அச்சம் ஏற்பட செய்யும், இது வேண்டுமா வேண்டாமா என்ற குழப்பத்தை தோற்றுவிக்கும். சொல்லப்போனால் செல்வராகவன் நினைத்த எமோஷனை ஜிவி பிரகாஷ் அந்த இசையின் மூலம் எந்த வித அலட்டலும் இல்லாமல் கொண்டு வந்திருப்பார். இன்றளவும் முன்னணி இசையமைப்பாளராக ஜொலித்துக்கொண்டிருப்பதற்கு அவர் அமைத்த ஏராளமான பின்னணி இசையும் காரணம். பொல்லாதவன் பின்னணி இசை இன்றுவரை ட்ரெண்டிங்கில்தானே இருக்கிறது.
மீட்பன் ஜிவி பிரகாஷ் குமார்: ஒரு இசை கேட்கும்போது ரசிகர் ஒருவருக்குள் இருக்கும் எமோஷனலை அந்த இசை தொட வேண்டும். அடுத்தது அந்த இசை மூலம் ஒரு உன்மத்த நிலைக்கு அவரை கொண்டு செல்ல வேண்டும். ஜிவியின் இசை அந்த இரண்டையும் செய்யக்கூடியது. ஆயிரத்தில் ஒருவனில் தி கிங் அரைவ்ஸ் இசையில் மிகப்பெரிய எமோஷனை கொடுத்து தன்னை இசையுலகின் இளவரசன் என பிரகடனப்படுத்திக்கொண்டார் ஜிவி பிரகாஷ்.
அதேபோல் கார்த்தியும், பார்த்திபனும் ஆடும் ‘தி செலிபிரேஷன் ஆஃப் லைஃப்’ இசையில் சோகத்தில் இருக்கும் ஒவ்வொரு ரசிகனையும் அதிலிருந்து மீட்டெடுத்து தன்னை ஒரு மீட்பனாக நிலை நிறுத்தியிருப்பார் அவர். தாய் தின்ற மண்ணே பாடலில் தனது பிள்ளைகளை நினைத்து கலங்கி பாடும் தாயாக பிரவாகம் எடுத்திருப்பார்.
ஜீவித்திருக்க காரணம் ஜிவி: கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் ஜிவி பிரகாஷும், சைந்தவியும் பாடிய ‘பெண் மேகம் போல நீ என் மேல் ஊர்கிறாய்’ என்ற பாடலில் நா. முத்துக்குமார் இப்படி ஒரு வரி எழுதியிருப்பார், ‘இசையாலே காதல் ஜீவியாகும் சைந்தவியே’.
ஆம், யாரோ இவன், ஒரு பாதி கதவு நீயடி, உருகுதே மருகுதே, கதைகளை பேசும் விழியருகே என பல பாடல்களின் மூலம் ஒவ்வொருவரின் உள்ளத்துக்குள்ளும் காதல் அழியாமல் ஜீவித்திருக்க ஜிவி பிரகாஷ் ஒரு காரணமாக இருக்கிறார். காதல் ஜீவத்திருக்க காரணமான ஜிவி பிரகாஷுக்கு தமிழ் பில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..