கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதிகளுக்காக செலுத்தும் கட்டணங்களை ஒன்லைன் ஊடாக செலுத்தும் வசதி

கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதிகளுக்காக செலுத்தும் கட்டணங்களை ஒன்லைன் ஊடாக செலுத்தும் வசதி நேற்று (12) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடற்றொழில் திணைக்களமானது சுமார் 45 வகையான அனுமதிகளை பயனாளிகளுக்கு வழங்கி வருகின்றது. இதுநாள்வரை கடற்றொழில் திணைக்களத்தின் அனுமதிகளை பெற்றுக்கொள்வதற்காக நேரடியாக திணைக்களத்தின் அலுவலகங்களுக்கு வருகை தந்தே அரசுக்கு கட்டணங்களை செலுத்துவது வழமயாக இருந்தது.

எதிர்காலத்தில் இக் கட்டணங்களை இணையத்தளம் ஊடக செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதானது பயனாளிகளுக்கு வசதியாக அமையும் என்பது மகிழ்ச்சியான விடயம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அவர்கள், நமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எமது நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கு பல வழிகாட்டல்களை கூறிவருகின்றார். அந்தவகையில் டிஜிட்டல் பரிவர்த்தனையையும், நவீன தொழில்நுட்பத்தையும் நடைமுறையில் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்,அமைச்சின் செயலாளர்கள்,அதிகாரிகள், இலங்கை வங்கியின் அதிகாரிகள் மற்றும் பயனாளிகளான வர்த்தகர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.