சியோல்: பிரபல கொரிய நடிகை பார்க் சூ ரியன் மாடிப்படிக்கட்டில் தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர். “எங்காவது துடிக்கட்டும் என் மகளின் இதயம்” என்று சூ ரியனின் தாய் கூறியது பெரும் நெகிழ்ச்சியை ஏறபடுத்தி உள்ளது
‘ஸ்னோ டிராப்’ உள்பட பல்வேறு கொரிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் கொரிய நடிகை பார்க் சூ ரியன் (வயது 29). இவர் கடந்த ஜூன் 11 அன்று மாடி படிக்கெட்டில் வந்த போது கீழே விழுந்த படுகாயம் அடைந்தார். நேற்று ஜெஜு தீவில் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில் இந்த விபத்து நடந்திருந்தது.
பார்க் சூ ரியன் படிக்கெட்டில் இருந்து கீழே விழுந்ததால் சுயநினைவை இழந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நடிகையை டாக்டர்கள் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர் ஆனால், சிகிச்சை எதுவும் பலன் அளிக்வில்லை. பலத்த காயம் காரணமாக அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மனம் உடைந்து போன நடிகை பார்க சூ ரியனின் குடும்பத்தினர், அந்த சூழ்நிலையிலும், நடிகையின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக மருத்துவர்களிடம் உறுதி அளித்தனர். இதையடுத்து உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
பார்க் சூ ரியனின் தாய், தென் கொரியாவின் பிரபல பத்திரிக்கையான சூம்பிக்கு அளித்த பேட்டியில், ” என் மகளின் மூளை மட்டும் சுயநினைவை இழந்துவிட்டதாக கூறினார்கள். ஆனால் அவளுடைய இதயம் இன்னும் துடிக்கிறது என்று மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். அவளது உடல் உறுப்புகள் மிகவும் தேவைப்படும் ஒருவருக்கு அது போய் சேரட்டும். அவளுடைய இதயம் யாரோ ஒருவரிடம் சென்று துடிக்கிறது என்ற எண்ணத்தில் நாங்கள் நிம்மதியாக வாழ முடியும்” என்று தாயின் பரிதவிப்பை உருக்கமாக தெரிவித்தார்
பார்க் சூ ரியனின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றது. ஜூன் 13 ஆம் தேதியான இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று பெற்றோர் அறிவித்தனர்.

நடிகை பார்க் சூ ரியன் 1994 இல் பிறந்தார். 2018 இல் Il Tenore இசை ஆல்பம் மூலம் கொரிய ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன் பின்னர் ஃபைண்டிங் மிஸ்டர். டெஸ்டினி, தி டேஸ் வி லவ்ட், சித்தார்த்தா, தி செலர் போன்ற பல இசை ஆல்பங்களில் நடித்து புகழ்பெற்றார். ஸ்னோ டிராப் என்ற தொடரிலும் அவர் நடித்து புகழ் பெற்றார். 29 வயதிலேயே தென்கொரியாவிலேயே புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராக விளங்கிய பார்க் சூ ரியன் மறைவு அந்த நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.