மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில்
காங்கிரஸ்
தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆனால் காங்கிரஸில் இருந்து இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் எம்.எல்.ஏக்கள் பிரிந்து சென்று பாஜகவில் இணைந்ததால் இரண்டு ஆண்டுகளில் ஆட்சி கவிழ்ந்தது.
மத்தியப் பிரதேச மாநிலத் தேர்தல்
இந்த சூழலில் அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியப் பிரதேச மாநிலம் தயாராகி உள்ளது. நடப்பு சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் ஜனவரி 6, 2024ல் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடைபெறும். சரியாக சொல்லப் போனால் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரப் போகிறது. இதையொட்டி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் வியூகங்கள் வகுத்து செயல்பட தொடங்கியுள்ளன.
காங்கிரஸ் ஆட்சி
சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற வெற்றி அக்கட்சிக்கு பெரும் உத்வேகம் அளித்துள்ளது. இதையடுத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் முழு மூச்சாக செயல்பட ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் மத்தியப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
ஜபல்பூரில் பிரச்சாரம்
இழந்த ஆட்சியை மீட்டெடுக்க சரியான வாய்ப்பு வந்துள்ளது. இந்த சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், உத்தரப் பிரதேச மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி, மத்தியப் பிரதேசத்தில் பிரச்சார களத்திற்கு அச்சாரம் போட்டுள்ளார். நேற்றைய தினம் ஜபல்பூர் சென்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
5 முக்கியமான வாக்குறுதிகள்
இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பிரியங்கா காந்தி ஆளும் பாஜக அரசின் ஊழல், விலைவாசி உயர்வு, அரசின் திட்டங்களில் முறைகேடுகள் உள்ளிட்டவை குறித்து விளாசி தள்ளினார். இதையடுத்து 5 முக்கியமான வாக்குறுதிகளை முன்வைத்தார். அவை,
இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கப்படும்.சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாய் நிர்ணயம் செய்யப்படும்வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். கூடுதலாக 200 யூனிட் மின்சாரம் பாதி கட்டணம் மட்டுமே நிர்ணயிக்கபப்டும்.அரசு ஊழியர்களின் நலன் கருதி பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.விவசாயிகள் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்.
அரசியல் களம்
இந்த வாக்குறுதிகள் மத்தியப் பிரதேச மாநில மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே தேர்தல் களம் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இம்மாநிலத்தில் 1980ஆம் ஆண்டிற்கு பின்னர் காங்கிரஸ், பாஜக என இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளன.
குறிப்பாக 2003 முதல் 2018 வரை 15 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் இருந்தது. அதன்பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைத்த நிலையில் இரண்டே ஆண்டுகளில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்த சூழலில் 2023 தேர்தல் களம் எப்படி அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.