அரியலூர்:
கட்டிலில் இருந்து தனது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சோகத்தை தாங்க முடியாத தந்தை, நூதன முறையில் தற்கொலை செய்து கொண்டது அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவருக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், அதற்கு பிறகுதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் தினேஷும், திவ்யாவும் தங்கள் குழந்தை மீது அதீத பாசம் வைத்திருந்தனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் குழந்தை விக்சன், வீட்டில் உள்ள கட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தது. தினேஷ் வேலைக்கு சென்றிருந்த நிலையில் திவ்யாவும், குழந்தை விக்சனும் மட்டுமே வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, திவ்யா வீட்டு ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். குழந்தை பெட்ரூமில் விளையாடிக் கொண்டிருந்தது.
இந்நிலையில், பலத்த சத்தம் ஒன்று கேட்க, திவ்யா பதறியடித்து பெட்ரூமிற்கு சென்ற பார்த்த போது குழந்தை தலையில் ரத்தத்துடன் கீழே விழுந்து கிடந்துள்ளது. இதை பார்த்து பயத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்த திவ்யா, உடனடியே குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆசை ஆசையாக பெற்றெடுத்த குழந்தை, இப்படி அநியாயமாக இறந்துவிட்டதே என தினேஷும், திவ்யாவும் கதறி அழுதுள்ளனர். அப்போது திவ்யாவின் அலட்சியத்தால் தான் தனது குழந்தைக்கு இந்த கதி ஏற்பட்டதாக தினேஷ் அழுது புலம்பியுள்ளார். பின்னர் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகும், தினேஷ் தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார். இதையடுத்து, தினேஷின் தாய்மாமா பழனிசாமி, அவரை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை வீட்டில் தனியாக இருந்த தினேஷ், தனது குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்துள்ளார். இதனால் அவருக்கு மீண்டும் மகனின் நியாபம் வர, அவரால் சோகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்த தினேஷ், தாமிரக் கம்பிகளை எடுத்து தனது கை மற்றும் உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு சுவிட்ச் பாக்ஸ் துளைக்குள் கையை விட்டுள்ளார். இதில் மின்சாரம் தூக்கியெறியப்பட்ட தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.