தலைமைச் செயலகத்தில் பதற்றம்.. துணை ராணுவப் படையினர் vs தமிழ்நாடு போலீஸ்.. என்ன நடக்கிறது?

சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்துக்குள் அமலாக்கத்துறையினருடன் இணைந்து நுழைய முயன்ற துணை ராணுவப் படையினரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் வருமான வரித்துறை அதிகாரிகளை திமுகவினர் தாக்கியதாக செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவ்வாறு தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, இந்த ரெய்டின் போது போல பல முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில், சென்னை மற்றும் கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் அமலாக்கத்துறை கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அமலாக்கத்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் இன்று மாலை தலைமைச் செயலகத்துக்கு வந்து அங்குள்ள செந்தில் பாலாஜியின் அறையில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பொதுவாக, அமலாக்கத்துறையினர் இதுபோன்ற சோதனையில் ஈடுபடும் போது, துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில், துணை ராணுவப் படையான ‘ரேபிட் ஆக்சன் ஃபோர்ஸ்’ (Rapid Action force) எனும் அதிவிரைவுப் படையினர் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அதன்படி, தலைமைச் செயலகத்துக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றால் அங்கும் இந்த துணை ராணுவப் படையினர் சென்றனர்.

ஆனால், தலைமைச் செயலகத்தில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீஸார், அமலாக்கத்துறை அதிகாரிகளை மட்டும் உள்ளே அனுமதித்தனர். துணை ராணுவப் படையினர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, துணை ராணுவப் படையினர் தலைமைச் செயலகத்துக்கு வெளியே உலவிக் கொண்டிருந்தனர். தலைமைச் செயலகத்துக்குள் ஆயுதங்களுடன் நுழைய யாருக்கும் அனுமதி இல்லை என்பதால் துணை ராணுவப் படையினரை தடுத்து நிறுத்தியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.