தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ், மணிமாலா தம்பதி. இவர்களுக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவகாரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். இந்த விவாகரத்து வழக்கில் மணிமாலா தனது கணவர் ரமேஷிடம் ஜீவனாம்சம் கேட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார்.
இந்த நிலையில் ஜீவனாம்சம் தொடர்பான வழக்கில் போடி நீதிமன்றத்தில் மணிமாலா ஆஜரானார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான வேலைகளை முடித்துவிட்டு போடி பேருந்து நிலையத்திற்கு நடந்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது நீதிமன்ற வளாகம் அருகே நின்றிருந்த டவேரா கார் ஒன்று திடீரென அதிவேகமாக விரைந்து வந்து நடந்து கொண்டிருந்த மணிமாலாவின் மீது மோதியது.
இதில் முன் பகுதி சக்கரத்தின் இடையே சிக்கிக்கொண்ட மணிமாலா பலத்த காயமடைந்தார். நீதிமன்ற வளாகம் முன்பு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் இந்த அதிர்ச்சியான சம்பவத்தை கண்டு உடனடியாக டவேரா கார் ஓட்டி வந்த டிரைவர் பாண்டித்துரையை பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர். பலத்த காயம் அடைந்த மணிமாலாவை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் பாண்டித்துரையிடம் நடத்திய விசாரணையில், மணிமாலாவின் கணவர் ரமேஷ் தான் கார் ஏற்றி கொலைசெய்ய ஏற்பாடு செய்தார் என்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து போடி டி.எஸ்.பி பெரியசாமி தலைமையிலான காவல் சிறப்புப்படை அமைத்து ரமேஷை கைதுசெய்தனர்.
மணிமாலாவின் மீது கார் ஏற்றி விபத்து ஏற்படுத்திக் கொல்ல முயற்சி செய்த டவேரா காரை கைப்பற்றி போடி நகரகாவல் நிலையம் கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட ரமேஷ் மற்றும் டிரைவர் பாண்டித்துரை ஆகிய இருவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரமேஷ் தன் மனைவியை இரண்டாவது முறையாக கொலை முயற்சி ஈடுபட்டது தெரியவந்தது. ஏற்கெனவே ஒரு முறை பைக்கில் மணிமாலாவை ஏற்றி கொலை முயற்சி செய்ய திட்டமிட்டு தோல்வி அடைந்ததாகவும் இரண்டாவது முறையாக தற்போது நேற்று நீதிமன்றத்திற்கு வந்த மணிமாலாவை ரமேஷ் தனது நண்பர் பாண்டித்துரையை வைத்து காரில் மோதி கொலை முயற்சியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.