கோயம்புத்தூரில் வசித்து வரும் பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார், தான் செல்லும் இடங்களில் பார்க்கும், உணரும் விஷயங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு பார்த்த ஒரு விஷயத்தை பகிர்ந்திருந்தார். அதுகுறித்து அவரிடம் பேசியபோது, “ஒரு கிரஹப்பிரவேச நிகழ்வுக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்துக்கு அருகே ஓர் இளநீர் கடை இருக்கு.
வெயிலோட பிடியிலிருந்து தப்பிக்க அந்த கடைக்கு இளநீர் குடிக்கச் சென்றேன். நான்கைந்து பேர் காத்திருக்க 70 வயது முதியவர், பொறுமையாக இளநீர் சீவிக் கொடுத்துக் கொண்டிருந்தாரு. அப்போது கடையிலிருந்த இளநீர் குலைகளை கவனித்தேன். ஒவ்வோர் இளநீர் குலையிலும் ஒவ்வொரு தமிழ் எழுத்து கோணல் மாணலாய் எழுதப்பட்டிருந்தது. வ, கு, தோ, தே… என்று இருந்தது.
நான் இளநீரை அருந்திவிட்டு அந்த முதியவரிடம் அது என்ன தமிழ் எழுத்துகளை இளநீரின் மீது எழுதி வைத்திருக்கிறீர்களே? என்று கேட்டேன். அதற்கு அவர், ‘அதை ஏன்ய்யா கேக்கறீங்க…? இளநீர் குடிக்க வர்றவங்க விதவிதமாக கேக்கிறாங்க. ஒருத்தர் தண்ணி மட்டும் போதும்னு சொல்லுவாரு. நாம காயை வெட்டிப் பார்த்தா, உள்ளே தேங்காயும் இருக்கும். உடனே அவங்க சண்டைக்கு வருவாங்க. ஒருத்தர் வழுக்கையா கேட்பார். வெட்டினா வெறும் தண்ணியா இருக்கும்.
இந்தப் பிரச்னை வரக்கூடாதுன்னு மரத்துல இருந்து குலையை வெட்டி கீழே இறக்கியதும், என்னோட பேரன் ஒவ்வொரு குலையிலும் இருந்து ஒரு காயை வெட்டிப் பார்த்து, அது என்ன வகைன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக வ, கு, தே, தோ-ன்னு எழுதி வெச்சிருவான்.
‘வ’ ன்னா வழுக்கை.
‘கு’ ன்னா குரும்பை.
‘தோ’ ன்னா தோசைப் பதம்.
‘தே’ ன்னா தேங்காய் பதம். இப்படி எழுதி வெச்சுகிட்டாதால யார் எதைக் கேட்டாலும் சொலபமா எடுத்து வெட்டிக் கொடுக்க முடியுது’னு சொன்னாரு.
நல்ல யோசனைதான் என்று சொல்லிய பிறகு, அது என்ன ஒரு குலையில மட்டும் ‘ச’ ன்னு எழுதியிருக்கு?ன்னு கேட்டேன்.
அவர் வெற்றிலைக் காவியேறிய பற்களோடு வெள்ளந்தியாய்
சிரித்துக் கொண்டே சொன்னார்.
‘அதுவா… அது சளி பதம்’னு சொன்னாரு. சளி பதத்துக்குப் பதிலாக நுங்கு பதம்னு சொல்லியிருக்கலாம். இருந்தாலும் வாடிக்கையாளர்களுக்கு அவங்க கேட்ட உடனே வகை வகையான இளநீரை எடுத்து வெட்டிக் கொடுக்க இந்த யுக்தி நல்ல யோசனையா இருக்கே என்று நினைத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினேன். விவசாயிகளுக்கும், இளநீர் வியாபாரிகளுக்கும் இந்த யோசனை பயனுள்ளதா இருக்குமே என்று முகநூலில் பகிர்ந்தேன்” என்றார் எழுத்தாளர் ராஜேஷ்குமார்.