வெலிசர பொருளாதார மத்திய நிலையம் சம்பவம் தொடர்பில் செய்திகளை வெளியிட்டவர்களிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து 02 வாரங்களுக்குள் முடிவுகளை பெற்று குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மீகொட, வெலிசறை, வெயங்கொடை, தம்புத்தேகம, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய போன்ற அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் ஸ்தாபித்தவர் தான் என்றும், இந்த பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தும் தனியார் ஒப்பந்தக்காரர்களால் நிர்மாணிக்கப்படவில்லை, அவை மத்திய பொறியியல் உசாதுணை பணியகத்தால் கட்டப்பட்டது என்றும் அவர் கூறினார்.
அரசாங்க உணவு திணைக்களத்தின் கைவிடப்பட்ட பல களஞ்சியசாலைகள் பொருளாதார மையங்களை நிறுவுவதற்காக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே, வெலிசர பொருளாதார மத்திய நிலையம் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யுமாறு விவசாய அமைச்சரிடம் கூறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.