எனது கருத்து சரிவர புரிந்து கொள்ளப்படவில்லை.. அண்ணாமலை வெளியிட்ட திடீர் அறிக்கை

சென்னை:
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து தான் கூறிய கருத்தை சரிவர புரிந்துகொள்ளாமல் சிலர் பேசி வருகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி நாளுக்கு நாள் பிசுபிசுத்து வந்த நிலையில், அதில் ஒரே அடியாக கல்லை தூக்கிப் போட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இரு தினங்களுக்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார். அதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் (ஜெயலலிதா) ஊழலுக்காக தண்டிக்கப்பட்ட வரலாறு இருக்கிறது” அதனால்தான் தமிழ்நாட்டை ஊழல் மலிந்த மாநிலம் என நாங்கள் கூறுகிறோம்” என அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்த விவகாரம் தான் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. “எங்களுடன் கூட்டணியில் இருந்து கொண்டே எங்கள் தலைவர் ஜெயலலிதாவை தரக்குறைவாக விமர்சிப்பதா..” என அதிமுகவினர் கொதிப்பில் உள்ளனர். மேலும், அவருக்கு எதிராக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியுள்ளதாவது:

சரிவர புரிந்துகொள்ளவில்லை:
இன்று அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் எனக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், நேற்று மற்றும் இன்று காலை, முன்னாள் தமிழக அமைச்சர்கள் சிலர் நான் ஆங்கில நாளேடுக்கு கொடுத்த பேட்டியை சரிவர புரிந்து கொள்ளாமல் எனக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்திருந்தனர். அவர்களுக்கும், தமிழக மக்களுக்கும், பாஜகவினருக்கும் சிலவற்றைத் தெளிவுபடுத்துவது எனது கடமையாக உணர்கிறேன்.

ஊழல் தான் பிரச்சினை:
தமிழகத்தில் ஊழல்தான் முக்கியப் பிரச்சினை. இத்தனை ஆண்டு காலம் ஒவ்வொரு குடிமக்களையும் சென்று சேர வேண்டிய நலத் திட்டங்கள், அரசியல்வாதிகளால் சுரண்டப்பட்டு, இறுதியில் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்ததே இல்லை. இத்தனை ஆண்டுகளில், அடித்தட்டு மக்கள் தங்கள் நிலையிலிருந்து ஒரு படி முன்னேறியிருக்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதில். கூட்டணிக் கட்சியையும், கூட்டணித் தலைவர்களையும் நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி தர்மம் நன்கு உணர்ந்தவன் நான். தமிழக அரசியல் வரலாற்றில் நடந்திருப்பதைக் கூறியிருக்கிறேன்.

எந்த மாநிலத்திலும் நடக்காதது:
கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, கூட்டணிக் கட்சி விரும்புவதை எல்லாம் நாங்களும் கூற வேண்டும் என்று எதிர்பார்ப்பது பொருத்தமற்றது. இன்றைய தினம், தமிழக அரசு தலைமைச் செயலகத்தில், அமைச்சர் ஒருவரின் அறையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசியலில் மலிந்திருக்கும் ஊழல், தமிழகத்திற்குக் கொண்டு வந்த மாபெரும் இழிவு, வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அவல நிலை இது.

என் அரசியல் இதுதான்:
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது நல்லாட்சி, அரசியல் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டுக் கொடுத்திருக்கிறது. ஊழலற்ற அரசு சாத்தியம் என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை வீண் போகாது, தமிழகத்தில் ஊழலற்ற, மக்கள் நலன் ஒன்றே சார்ந்த அரசு அமையும். அதை நோக்கியே எங்கள் அரசியல் பயணமும் தொடரும். எனது அரசியல் இதுதான். ஏழை எளிய மக்களின் குரலாக என் குரல் என்றும் ஒலிக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.