புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “புதுச்சேரியில் ரத்துசெய்யப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழர் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு தி.மு.க-வால்தான் மறுக்கப்பட்டது என்பதை உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். தமிழர் பிரதமராக வருவது மட்டுமின்றி, தமிழர் அப்துல் கலாம் மீண்டும் ஜனாதிபதி ஆவதையும் தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து தடுத்தன என்ற வரலாற்றை மறைக்க முடியாது.
தி.மு.க-வின் குற்றத்தை உள்துறை அமைச்சர் நேரடியாகக் கூறுகிறார். ஆனால் அந்த சரித்திரத்தை மறைக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஏதேதோ சொல்கிறார். அதை கருத்தாக ஏற்க முடியாது. பிரதமர் மோடி அளவுக்குத் தமிழைக் கையாண்டது யாரும் கிடையாது. திருக்குறள் குறித்தும், பாரதியார் குறித்தும், தமிழ் கலாசாரம் குறித்தும் பிரதமர் எடுத்து சொன்னதுபோல் இதுவரை யாரும் கூறியது கிடையாது.
மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழகத்தின் கலாசாரம், பெருமை, தொன்மையைக் கையாண்டு பச்சைத் தமிழனாகப் பணியாற்றி வருகிறார். நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து மறுபடியும் அதை உறுதிசெய்திருக்கிறார். சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தால் தமிழ் மறுக்கப்படாது என ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டோம். தமிழ், தமிழ் எனக் கூறும் தமிழகத்தில் 50,000 பேர் பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்திருக்கின்றனர். தமிழ் பேசுவது மட்டுமின்றி, தமிழை அரியணையில் ஏற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ் படிப்பது தற்போது அரிதாகி வருகிறது.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் வந்தால் மாணவர்களின் ஆற்றல் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரவும், சவால்களை சமாளிக்கவும் உறுதுணையாக இருக்கும். சி.பி.எஸ்.இ மூலம் புதுச்சேரியில் புரட்சி ஏற்படுத்தி விடுவார்களே என்ற அச்சத்தில் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்மீது தங்களுக்கு மட்டுமே பற்று இருப்பதுபோன்றும், மற்றவர்களுக்கு அக்கறை இல்லாதது போன்றும் செயல்படுகின்றனர். ஆனால் தமிழ் எங்கள் உயிர்” என்றார்.