சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்துக்குள், இன்று காலை அவர் வாக்கிங் சென்ற சமயத்தில் அதிரடியாகப் புகுந்தனர் அமலாக்கத்துறை அதிகாரிகள். சரியாக 7:45 மணிக்கு வந்ததாகப் பாதுகாவலர்கள் தகவல் தெரிவிக்கிறார்கள். தகவலறிந்த அமைச்சர் செந்தில் பாலாஜி வாக்கிங்கைப் பாதியில் நிறுத்திவிட்டு, டாக்ஸியில் திரும்பி வீட்டுக்குள் சென்றதும் விசாரணை தொடங்கியிருக்கிறது.
வெறிச்சோடிய அமைச்சரின் இல்லம்!
கடந்த மே மாதம் 25-ம் தேதி கரூரில் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோது, காவல்துறையினருக்கு முன்பே தொண்டர்கள் அந்தப் பகுதியில் குவிந்தனர். ஆனால் இன்று நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின்போது, தி.மு.க தொண்டர்கள் யாரும் அங்கு வரவில்லை. சோதனை குறித்த தகவலறிந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் குழுவினர் மட்டுமே, வீட்டு வாசலில் காத்திருந்தனர்.
விரைந்த துணை ராணுவப்படை!
எந்தப் பரபரப்புமின்றி காணப்பட்ட அமைச்சரின் இல்லத்துக்கு திடீரென என்ட்ரி கொடுத்தது துணை ராணுவப் படையான ’Rapid Action Force.’ துப்பாக்கி ஏந்திய 20-க்கும் மேற்பட்ட போலீஸார் மளமளவென வீட்டுக்குள் புகுந்தனர். அவர்களைத் தொடர்ந்து இரண்டு மூன்று கார்களில் அதிகாரிகளும் வந்திறங்கினர்.
அவர்களும் உள்ளே செல்ல… வெளியே பரபரப்பு தொற்றிக்கொண்டது. இது குறித்து பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். “பாதுகாப்புப் பணிகளுக்காகத்தான் வந்திருக்கிறோம், உள்ளே அதிகாரிகள் சோதனை செய்கிறார்கள். அவர்கள் வெளியே வந்தால் பாதுகாப்புத் தர வேண்டுமென்றே வந்திருக்கிறோம்” என்றனர். அதற்குள், `செந்தில் பாலாஜியைக் கைதுசெய்யவே வந்திருக்கிறார்கள்’ என வதந்திகள் சமூக வலைதளங்களில் வலம்வந்தன.
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள்!
அனைவரும் அடுத்து எந்தக் காவல்படை வரப்போகிறதோ எனச் சாலையை உற்று நோக்கிக்கொண்டிருந்தபோது நான்கு இரு சக்கர வாகனங்களில் படையாக வந்தனர் ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள். சோதனை செய்துவந்த அதிகாரிகள் மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்திருப்பதாகத் தகவல் சொல்லப்பட்டது.
சுமார் 32 பேருக்கு உணவு ஆர்டர் கொடுத்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சோதனை நடக்கும் தகவலறியாத நபர் ஒருவர், அமைச்சர் வீட்டுக்கு மாலை நாளிதழுடன் நுழைய முற்பட்டார். ”கதவைத் திறங்க சார், பேப்பர் போடணும்” என அவர் சொன்னதும், அமைச்சர் இல்லத்தின் முன்பு கூடியிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலை ஏற்பட்டது.
கதவைத் தட்டிய ஆர்.எஸ்.பாரதி!
மதியம் 3:30 மணியளவில் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செந்தில் பாலாஜியின் இல்லத்துக்கு வருகை தந்தார். அவருடன் எம்.எல்.ஏ பரந்தாமன் மற்றும் வழக்கறிஞர்கள் வந்திருந்தனர். உள்ளே செல்ல முற்பட்டு, அதிகாரிகளை அழைத்தனர். அவர்கள் வர நேரம் எடுத்துக்கொண்டதால் ஆர்.எஸ்.பாரதி தரப்பினர் கதவைத் தட்ட ஆரம்பித்துவிட்டனர்.
பின்னர் காவலர் ஒருவரிடம் ஆர்.எஸ்.பாரதி, “நான் முன்னாள் எம்.பி. தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் நான். உள்ளே சென்று செந்தில் பாலாஜியைப் பார்க்க வேண்டும்” என்றார். `தலைமை அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு வருகிறோம்’ என்றவர்கள் மீண்டும் வரவில்லை.
அலைக்கழித்த அமலாக்கத்துறை!
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டு வாசலில் ஆர்.எஸ்.பாரதி சுமார் 40 நிமிடங்கள் காத்திருந்தார். இரண்டு முறை அதிகாரிகள் வந்து முறையான பதிலைச் செல்லாமல் திரும்பிவிட்டனர். ”காலை முதலே ரெய்டு நடக்கிறது. நாங்கள் செந்தில் பாலாஜியைப் பார்க்க வேண்டும்… எப்படி இருக்கிறார் எனத் தெரிந்துகொள்ள வேண்டும். என்னை மட்டும் உள்ளே அனுப்புங்கள், இல்லை செந்தில் பாலாஜியை வெளியே அழைத்து வாருங்கள், பார்க்க வேண்டும்’ என ஆர்.எஸ்.பாரதி முறையிட்டார். ஆனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாகக் காலம்தாழ்த்திவிட்டு, பின்னர் அனுமதி மறுத்துவிட்டனர்.
உள்ளே ஒண்ணுமே இல்லை சார்!
சோதனை நடப்பதால் வெளியில் காத்திருந்த வழக்கறிஞர் ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தோம். ஒருவர், “அமைச்சரின் அரசு இல்லத்தில் மக்களுக்குக் கொடுத்த மனுக்கள் மட்டுமே இருக்கப்போகின்றன. இவ்வளவு நேரம் உள்ளே என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை” என்றார். மற்றொரு வழக்கறிஞரோ, “வந்துவிட்டு சீக்கிரம் போனால் ஒண்ணுமே இல்லைனு மக்கள் நினைச்சுடக் கூடாதுன்னு, ரொம்ப நேரம் சோதனை பண்றாங்க. பெருசா ஏதோ இருக்கோன்னு மக்களுக்கு எண்ணம் ஏற்படுத்தவே நேரத்தை இழுத்தடிச்சுக்கிட்டு இருக்காங்க” என்றார்
சோதனைக்குப் பிறகு என்ன செய்யப்போகிறது அமலாக்கத்துறை என்பதே தமிழக அரசியலின் `தற்போதைய’ ஹாட் டாப்பிக்!