மதுரையில் அனுமதி நேரத்தை தாண்டி செயல்பட்ட மதுபானக் கடை – அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்.!
மதுரை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சங்கீதா என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இவர் மாவட்டத்தில், அரசு பணிகள் நடைபெறும் இடங்களுக்கு நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.
அதன் படி ஆட்சியர் சங்கீதா கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாடிப்பட்டி பகுதியில் நடைபெற்ற சாலை பணியில் தரமில்லாததை பார்த்து அது தொடர்பாக அதிகாரிகளிடம் கேள்வி கேட்டு அசரடித்தார். அதற்குப் பதில் சொல்ல முடியாத அதிகாரிகள் திண்டாடினர்.
இந்த நிலையில், மேலூர் கச்சிராயன்பட்டியில் அரசு மதுபானக் கடை அரசு அனுமதித்த நேரத்தையும் தாண்டி செயல்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. அந்த புகாரின் படி ஆட்சியர் சங்கீதா சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து, அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி அங்கு மது விற்பனை செய்வதை உறுதிப்படுத்தினார்.
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அந்த மதுபானக் கடை மேலாளர்கள் செல்வம் மற்றும் கண்ணன் விற்பனையாளர்கள் பால்ராஜ் மற்றும் பாண்டி உள்ளிட்ட நான்கு பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஆட்சியரின் இந்த நடவடிக்கையை அப்பகுதி மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர்.