ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் இணை ஆணையராகப் பதவி வகித்து வருபவர் மாரியப்பன். இவர் ஆகம விதி மீறல்களில் ஈடுபடுவதாகவும், பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கையை சீர்குலைத்து, கோயிலை வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாற்றிவிட்டதாவும், மக்கள் பேரவை அமைப்பினர், இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜ.க-வினர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கோயிலின் கிழக்கு கோபுர வாசலில் அமைந்திருக்கும் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய போராட்டக்காரர்கள், “உலகப் பிரசித்திப் பெற்ற ராமேஸ்வரம் கோயிலின் இணை ஆணையராக மாரியப்பன் பொறுப்பேற்றதிலிருந்து, `பல்வேறு மாற்றங்களைச் செய்கிறேன்’ என்ற பெயரில், ஆகம விதிகளை தொடர்ந்து மீறி வருகிறார். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்திருந்தபோது புகாரளித்தோம். அதேபோல் அறநிலையத்துறை உயரதிகாரிகளிடம் புகாரளித்தும் மாரியப்பன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தற்போது பிரகாரங்களில் கம்பி வேலி வைத்து பக்தர்களை வளம் வரவிடாமல் தடுத்திருக்கிறார். பாரம்பர்யமாக சுவாமி வீதி உலா மற்றும் உற்சவ காலங்களில் பல்லக்குத் தூக்கிச் செல்லும் உள்ளுரைச் சேர்ந்த சீர்பாதம் தாங்கிகளை கோயிலைவிட்டு வெளியேற்ற முயன்று வருகிறார். வரக்கூடிய பக்தர்களுக்கு அடிப்படை பிரச்னைகளான கழிவறை, குடிநீர், ஓய்விடம் அமைத்து தராமல் பக்தர்களை அலைக்கழிப்பு செய்கிறார்.
சாமி சன்னிதியில் தேங்காய் உடைப்பதற்கு உரிய பணியாளர்களை நியமிக்காமல் பெண்களை வைத்து தேங்காய் உடைத்து மரபுகளை மீறியிருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் முதியவர்களுக்கு தரிசனம் செய்ய தனிப்பாதை அமைத்துக் கொடுக்காமல், அவர்களை கோயிலுக்குள் அங்குமிங்கும் அலைக்கழித்து வருகிறார்” என்றனர்.
அதைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்களைக் கைதுசெய்ய முற்பட்டபோது போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அனைவரையும் கைதுசெய்த காவல்துறையினர், வாகனத்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க கோயில் இணை ஆணையர் மாரியப்பன் செல்போன் எண்ணுக்குப் பலமுறை முயன்றும், அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை.