சென்னை: Kodi Parakkura Kaalam (கொடி பறக்குற காலம்) மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாமன்னன் படத்தின் ஐந்தாவது சிங்கிளான நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது.
இயக்குநர் ராமிடம் அலுவலக உதவியாளராக இருந்து பின்னர் உதவி இயக்குநராக பல வருடங்கள் இருந்துவிட்டு பரியேறும் பெருமள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் மாரி செல்வராஜ். கதிர், யோகி பாபு, கயல் ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானது. முதல் படத்திலேயே சாதிய அட்டூழியங்களை தோலுரித்து காட்டும்வகையில் காட்சிகளை வைத்து கவனம் ஈர்த்தார் மாரி.
குவிந்த பாராட்டு: பரியேறும் பெருமாளை பார்க்கும்போது இது முதல் படத்தை இயக்கிய இயக்குநர் போல் தெரியவில்லை என்றே பலரும் கூறினர். அந்த அளவுக்கு தன்னை ஒரு தேர்ந்த படைப்பாளியாக பிரகடனப்படுத்திக்கொண்டார் மாரி செல்வராஜ். வசனங்களும், காட்சியமைப்புகளும், அவர் வைத்த குறியீடுகளும் அனைவரையுமே ஆச்சரியப்பட வைத்தது.குறிப்பாக க்ளைமேக்ஸில் அவர் எழுதியிருந்த வசனம், வைத்திருந்த ஷாட் தி பெஸ்ட் என கொண்டாடப்பட்டது.
மாரியின் கர்ணன்: முதல் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். கொடியங்குளத்தில் எளிய மக்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் நடத்திய அராஜகத்தை மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் ஹிட்டானாலும் பரியேறும் பெருமாளில் இருந்தது ஏதோ ஒன்று இந்தப் படத்தில் இல்லை என்ற விமர்சனத்தையும் சந்தித்தது. அப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இருப்பினும் இரண்டு படங்களிலேயே மாரி செல்வராஜ் முன்னணி இயக்குநராகிவிட்டார்.
மாமன்னன்: இப்படிப்பட்ட சூழலில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.மேற்கு மாவட்ட அரசியலை பேசும் இந்தப் படத்தில் வடிவேலுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும், வழக்கமான பாணியில் வடிவேலு இதில் இருக்கமாட்டார் என்றும் படத்தின் போஸ்டர்கள் உணர்த்தின. அதேபோல் மாரி செல்வராஜும் அதனை ஒவ்வொரு பேட்டியிலும் உறுதிப்படுத்திவருகிறார். படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகிறது.
ஆடியோ வெளியீட்டு விழா: படத்தின் ஆடியோ வெளியீட்டு கடந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் தவிர்த்து கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் வாசிக்க வடிவேலு பாடல் பாடினார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் வடிவேலுவின் பேச்சும் ரசிக்கும்படியாகவே இருந்ததாக விழாவில் பங்கேற்றவர்கள் கூறினார்கள்.
ஐந்தாவது சிங்கிள்: படத்தில் இடம்பெற்றிருக்கும் மலையிலதான் தீ பிடிக்குது ராசா, ஜிகு ஜிகு ரயில் உள்ளிட்ட நான்கு பாடல்களின் லிரிக்கல் வீடியோ ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ஐந்தாவது சிங்கிளான நம்ம கொடி பறக்குற காலம் வந்தாச்சு பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. பாடலை யுகபாரதி எழுத, கல்பனா ராகவேந்தர், தீப்தி சுரேஷ், ரக்ஷிதா சுரேஷ், அபர்ணா ஹரிகுமார் பாடியிருக்கின்றனர். இந்த லிரிக்கல் வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.