பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் ஆட்சியில் இருக்கிறது. இந்த ஆட்சியில் பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் மகனும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவருமான சந்தோஷ் குமார் சுமன், மாநில அரசில் எஸ்.சி/எஸ்.டி நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், சந்தோஷ் குமார் சுமன் அமைச்சரவையிலிருந்து விலகுவதாக அறிவித்து ராஜினாமா கடிதத்தை பீகார் நாடாளுமன்ற விவகார அமைச்சரான விஜய் குமார் சவுத்ரியிடம் வழங்கியிருக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பல்வேறு உயிரினங்கள் காட்டில் வாழ்கின்றன. சிங்கங்களால் சிறு விலங்குகள் வேட்டையாடப்படும் … வேட்டையிலிருந்து சில நேரம் மான்களும் தப்பிக்கும். அதுபோல இதுவரை தப்பித்து வந்தோம். தப்பிக்கும் வழிகளில் ஒன்று பிரிந்து செல்வது. பிரிந்து சென்றால் நாங்கள் பாதுகாப்பாக இருக்க மாட்டோம் என்று உணர்ந்தோம். அதனால் எனது பதவியை மட்டும் ராஜினாமா செய்கிறேன். முதல்வர் நிதிஷ் குமார் ஜனதா தளத்துடன் எங்கள் கட்சியை இணைக்க அழுத்தம் கொடுத்தார்.
எங்கள் கட்சியின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. அதைப் பாதுகாக்க நான் இதை செய்தாக வேண்டும். ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஒரு கட்சியாகக்கூட அங்கீகரிக்கப்படாதபோது, பாட்னாவில் நடைபெறும் பெரிய எதிர்க்கட்சிக் கூட்டத்தில் நாங்கள் எப்படி அழைக்கப்பட்டிருப்போம்…
நாங்கள் ஒரு சுயேச்சையான கட்சி, எங்கள் இருப்பை பாதுகாப்பது பற்றிதான் யோசிப்போம். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை அணுகுவது குறித்து எனது கட்சி இன்னும் சிந்திக்கவில்லை. நான் இன்னும் ஆளும் அரசின் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்கவே விரும்புகிறேன்” என்று கூறினார்.