Simbu – அடம் பிடித்த இயக்குநர்.. ஓட்டம் எடுத்த சிம்பு.. கொரோனா குமார் நிலை என்ன?

சென்னை: Simbu (சிம்பு) கோகுல் இயக்கத்தில் சிம்பு கமிட்டாகியிருந்த கொரோனா குமார் படத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பன்முக திறமை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு. நடிப்பு, இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, நடனம் என எந்த கிரவுண்டில் இறங்கினாலும் ஃப்ரீ ஹிட்டில் விளையாடுபவர் சிக்ஸ் அடிப்பவர். எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ அதே அளவு அவரை சுற்றி சர்ச்சைகளும் எழுந்துகொண்டிருந்தன. அவரை சூழ்ந்த பிரச்னை காரணமாக அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் இருந்தது. எனவே உடல் எடை கூடி மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்.

செகண்ட் இன்னிங்ஸ்: உடல் எடையை குறைத்து தனது எண்ணங்களை ஒருமுகப்படுத்தி மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார் சிம்பு. இரண்டாவது இன்னிங்ஸில் ஈஸ்வரன் கைகொடுக்கவில்லை என்றாலும் சிம்புவின் மாநாடுக்கு கூட்டம் அலைமோதியது.அதன் காரணமாக படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்து மெர்சல் செய்தது. எனவே விண்டேஜ் சிம்பு மீண்டும் வந்துவிட்டார் என எஸ்டிஆர் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

வெந்து தணிந்தது காடு: அதேபோல் மாநாடுக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்திருந்தார். கிராமத்து இளைஞர், மும்பையில் வேலை பார்க்கும் இளைஞர் என முத்து என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க சிம்புவின் கிராஃப் உச்சத்துக்கு சென்றது. எனவே இனி சிம்புவுக்கு சறுக்கலே கிடையாது என்ற நம்பிக்கை பலமாக பிறந்தது ரசிகர்களுக்கு.

சறுக்கிய பத்து தல: இப்படிப்பட்ட சூழலில் மஃப்டி என்ற கன்னட படத்தின் ரீமேக்காக பத்து தல படத்தில் நடித்தார். கன்னடத்தில்மெகா ஹிட்டடித்தாலும் தமிழில் சொதப்பியது. இருப்பினும் சிம்புவின் நடிப்பு பாராட்டப்பட்டது. ஆனால் ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சிம்புவுக்கு பத்து தல சின்ன சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது. இந்த சறுக்கலை அடுத்தப் படத்தில் சரி செய்துவிடுவார் என நம்பலாம்,.

சிக்கலில் சிம்பு?: பத்து தல படத்தை முடித்த சிலம்பரசன் அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இது அவரது கரியரில் ரொம்பவே முக்கியமான படமாக அமையும் என கருதப்படுகிறது. அதேசமயம் வெந்து தணிந்தது காடு 2 படத்துக்காக வேல்ஸ் நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தை சிம்பு மீறிவிட்டார் என புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. இதனால் கமல் – சிம்பு – தேசிங்கு படத்துக்கு சிக்கல் வருமோ என எஸ்டிஆர் ரசிகர்கள் அஞ்சுகின்றனர்.

கொரோனா குமார்: இதற்கிடையே இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தார் சிம்பு. ஆனால் அந்தப் படம் குறித்த எந்தப் பேச்சும் இதுவரை எழவில்லை. தற்போது அதுகுறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது அந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் வருகிறதாம். அந்தக் கதாபாத்திரத்தில் தானே நடிக்கிறேன் என கோகுல் கூறினாராம்.

ஆனால் இது ரொம்ப வெயிட்டான கதாபாத்திரம் எனவே எஸ்.ஜே.சூர்யா போன்றவர் நடித்தால் நன்றாக இருக்கும் சிம்பு கூறியதாகவும், அதற்கு கோகுல் ஒத்துக்கொள்ளாததால் சண்டை முற்றி படத்திலிருந்து சிம்பு வெளியேறிவிட்டார் எனவும் சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.