சென்னை: நடிகர் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ள படம் டி50. முன்னதாக ப. பாண்டி என்ற படத்தை இயக்கியுள்ள தனுஷ் இயக்கத்தில் இந்தப் படம் இரண்டாவதாக உருவாகவுள்ளது.
தன்னுடைய முதல் படத்திலேயே வயதான காலத்தில் அவர்களின் தேடல் மற்றும் காதல் உள்ளிட்டவற்றை மிகவும் அழகாக வெளிப்படுத்தினார் தனுஷ். அடுத்ததாக நான் ருத்ரன் என்ற படத்தை அவர் இயக்கவிருந்த நிலையில், அந்தப் படம் ட்ராப் ஆனது. இதனிடையே தற்போது டி50 படத்தை அவர் இயக்கவுள்ளார்.
3 சகோதரர்களை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்காக தன்னுடைய கெட்டப்பில் மிகப்பெரிய மாற்றத்தை தனுஷ் செய்யவுள்ளாராம்.
கெட்டப்பை மாற்றும் தனுஷ்: நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரையில் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அவர் அடுத்ததாக இயக்கி நடிக்கவுள்ள டி50 படத்தின் சூட்டிங் ஜூலை முதல் வாரத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள நிலையில், படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஜூலையில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான சூட்டிங்கை தனுஷ் எடுத்து முடித்துவிட்டாராம்.
3 சகோதரர்களை மையமாக வைத்து உருவாகவுள்ள இந்தப் படத்தில் தனுஷ் வித்தியாசமான கெட்டப்பில் முடியை மிகவும் ஷார்ட்டாக வெட்டிக் கொண்டு நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷுடன் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன், அபர்ணா முரளி, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் இணைந்துள்ளனர். சந்தீப் கிஷன் தனுஷின் தம்பியாக நடிக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் அபர்ணா முரளி.
துஷாரா விஜயன் தனுஷின் தங்கையாக நடிக்க கமிட்டாகியுள்ளார். ஜூலை மாதம் ஒன்றாம் தேதி இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் 500 வீடுகள் கொண்ட பிரம்மாண்டமான செட் போடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தொடர்ந்து ஒரே ஷெட்யூலாக 90 நாட்கள் இந்த இடத்தில் சூட்டிங் நடத்த தனுஷ் திட்டமிட்டுள்ளாராம். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் ரிலீசாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு தற்போது ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டைட்டில் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் இணைந்துள்ள நிலையில், ஜூலையில் வெளியாகவுள்ள படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இவரது பிஜிஎம்மில் கலக்கலாக வெளியாகவுள்ளது. இந்த வீடியோவில் தனுஷின் ஷார்ட் ஹேர் கெட்டப்பும் வெளியாகவுள்ளது. தொடர்ந்து கேப்டன் மில்லர் படத்திற்காக நீண்ட நாட்களாக தாடி, மீசை, நீண்ட தலைமுடியுடன் காணப்படும் தனுஷை இப்படி பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக பிரபல தெலுங்குப்பட இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர், டி50 படங்களை போலவே சேகர் கம்முலா படத்திலும் மிகவும் அழுத்தமான கேரக்டர் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நடிகக் நடிகர் சஞ்சய் தத்திடம் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிசியான நடிகராக உள்ள தனுஷ், இடையில் தன்னுடைய விருப்பமான டைரக்ஷனிலும் கவனம் செலுத்துவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.