“அரசமைப்புக்கு எதிரான கைது நடவடிக்கை!” – வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ
அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை செய்வதற்காக அமலாக்கத்துறையிலிருந்து வந்திருந்தார்கள். அப்படி வந்தவர்கள் இன்று காலை ஏறக்குறைய 2:15 மணியளவில் எந்தவிதக் காரணமும் இன்றி, கைதா என்றுகூட சொல்லாமல், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.
செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டிருக்கிறாரா அல்லது என்ன விஷயம்என்றுகூட அவருடைய உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்திய குடிமகன் யாரையும் கைதுசெய்வதற்கு இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் சில வழிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அவை எதுவுமே இந்தக் கைது நடவடிக்கையில் பின்பற்றப்படவில்லை. அதேபோல கைதென்றால் முன்னதாகவே நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவுமே அவர்கள் செய்யவில்லை. எனவே, இந்த நடவடிக்கை அரசமைப்புக்கும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கும் எதிரான நடவடிக்கை” என்றார்.
செந்தில் பாலாஜி கைது? – மருத்துவமனையில் அனுமதி, குவிந்த அமைச்சர்கள்… அடுத்து என்ன?
தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை அரசு இல்லம், கரூர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வந்தனர். சுமார் 17 மணி நேரம் இந்தச் சோதனை தொடர்ந்து நிலையில், இன்று நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்து, மேலதிக விசாரணைக்காக அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதாகத் தெரிகிறது.
அப்போது காரில் சென்றுகொண்டிருக்கும்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து உடனடியாக அவரை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி, எ.வ.வேலு உள்ளிட்டோர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைந்திருக்கின்றனர்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது