தமிழக மின்துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர் முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் இருந்தது.
இதில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம், முறைக்கேடு தொடர்பாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் வீடு, அலுவலகங்களில் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினரின் பாதுகாப்புட்டன் சென்னை கிரீன்வேஸ் சாலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் பங்களா, மந்தைவெளி பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் அசோக்குமார் வீடு ஆகியவற்றில் அமலாக்கதுறை அதிகாரிகள் நேற்று காலை 8:30 மணியில் இருந்து நள்ளிரவு 1:30 வரை 18 மணிநேரம் சோதனை நடத்தினார்கள்.
அதன்பிறகு செந்தில் பாலாஜியை கைது செய்து, விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை குறித்து, காலை 9:30 மணிக்கு மருத்துவ நிர்வாகம் அறிக்கை வெளியடும் என எதிர்பார்க்கப்படுகிறது.