கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான வீடு, அவரது சகோதரர் அசோக்குமார் வீடு என எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை 8 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட தொடங்கினர். கரூர் அருகில் உள்ள ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் அமைந்துள்ள அசோக்குமார் வீடு, ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி (எ) சுப்பிரமணி வீடு, வெங்கமேடு பகுதியில் சண்முகம் வீடு, ஈரோடு சாலையில் உள்ள ரமேஷ் பாபு வீடு, செங்குந்தபுரம் பகுதியில் ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகம், ஜவஹர் பஜாரில் உள்ள பழனி முருகன் ஜூவல்லரி நகைக்கடை, வேலாயுதம்பாளையத்தில் உள்ள கார்த்தி என 8 இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில், அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீஸார் உதவியுடன் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில், தொடர்ந்து அமைச்சர் வீடு, அவரது சகோதரர் அசோக்குமார் வீடு, ராயனூர் கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் மணி என்ற சுப்பிரமணி வீடு, வேலாயுதம்பாளையம் கார்த்திக், வெங்கமேடு சண்முகம், ஈரோடு சாலையில் உள்ள ரமேஷ்பாபு வீடுகளிலும் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற அமலாக்கதுறையினர் சோதனை, நேற்று இரவு நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே அமைந்துள்ள பழனி முருகன் ஜுவல்லரி, ஆடிட்டர் சதீஷ்குமார் அலுவலகம் என கரூரில் சில இடங்களில் மட்டும் தொடர்ந்து இரவிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் அமலாகத்துறையால் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இது தொடர்பான செய்திகளின் அப்டேட்களை கீழே உள்ள லின்கில் தெரிந்து கொள்ளலாம்..!