பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை: செந்தில்பாலாஜி கைதுக்கு வைகோ கண்டனம்

சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஏவி விடுவது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.

மேற்கு வங்காளம், புது டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜக நடத்திய அரசியல் சித்து விளையாட்டுகளை தமிழ்நாட்டிலும் அரங்கேற்றுவதற்கு திட்டம் தீட்டி, அதைச் செயல்படுத்த முனைந்திருக்கிறது.

அதன் ஒரு பகுதியாகத்தான் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்திற்குள் அமலாக்கத் துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.

தமிழ்நாடு மின்சாரத் துறை மற்றும் ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பதாக தெரிவித்தும்கூட, விசாரணை முடிந்து, எந்தவிதமான சட்ட நெறிமுறைகளையும் பின்பற்றாமல் நள்ளிரவில் அவரைக் கைது செய்து துன்புறுத்தியிருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

ஜனநாயகத்தில் இத்தகைய மிரட்டல் போக்குகளுக்கு ஒருபோதும் இடம் இல்லை. இதனை திராவிட முன்னேற்றக் கழக அரசு முறியடிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.