அரசாங்கத்தின் கிராமத்தினுடனான கலந்துரையாடல் 2020/2021 காலப்பகுதிக்கான வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தமது தொழிலை மேம்படுத்துவதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகள் (12) இடம்பெற்றன.
கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் வேண்டு கோளின் பேரில் மண்முனை மேற்கு பிரதேசத்தினைச் சேர்ந்த சுமார் 46 பயனாளிகளுக்கான உபகரணங்கள் இரண்டாங்கட்டமாக இன்று வழங்கப்பட்டன.
இதன்போது குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 37 மீனவர்களுக்கான தோணிகள், விவசாயிகளுக்கான 8 நீர்ப் பம்பிகள் மற்றும் விவசாய நீர்ப்பாசனத்திற்கான குழாய்கள், இராசயன தெளி கருவி ஆகியன பயனாளிகளிடம் பகிர்ந்தளிக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் எஸ். பிரசாந்தன் கலந்து கொண்டு பயணாளிகளுக்கான தொழில் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
மேலும் பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சபேசன் உட்பட அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.