செந்தில் பாலாஜி: “விசாரணைக்கு ஒத்துழைத்தப் பிறகும் சித்ரவதை ஏன்?" – ஸ்டாலின் காட்டம்

நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அவர் இன்று நள்ளிரவு கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைப் பெற்றுவருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,”தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பா.ஜ.க பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கெனவே சொல்லி இருந்தேன்.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன். அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி – அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு நடத்துவோம் என்று காட்ட நினைத்திருக்கிறார்கள்.

இதனைக் கண்டித்து விரிவான அறிக்கையை நான் நேற்று மாலையே கொடுத்துள்ளேன். நான் மட்டுமல்ல, அகில இந்திய கட்சித் தலைவர்களும் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் இதனைக் கண்டித்துள்ளார்கள். ஏனென்றால் இதுமாதிரி பா.ஜ.க. இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருவதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் அறிவார்கள். அதுதான் இங்கும் நடக்கிறது. விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது.

செந்தில் பாலாஜி

நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள். நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும்? இந்த வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது தேவையா? அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுகிறது.

என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார். எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர்வோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக தி.மு.க. உறுதியுடன் எதிர்கொள்ளும். பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. இந்த அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.