சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அமர்விலிருந்து நீதிபதி சக்திவேல் விலகினார். இதையடுத்து, வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார்.
மருத்துவமனைக்கு வந்த நீதிபதி: அமைச்சர் செந்தில்பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து, செந்தில்பாலாஜி சிகிச்சைப் பெற்று வரும் ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேரில் சென்று செந்தில்பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, நீதிபதியிடம் அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்ற காவலில் வைக்க கோரி வலியுறுத்தப்பட்டது. அதேபோல், செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம். எனவே அவரை நீதிமன்ற காவலில் வைக்க அனுமதி வழங்கக் கூடாது என்று திமுக வழக்கறிஞர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. சுமார் 15 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த நீதிபதி, அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நலம் குறித்த விவரங்களையும், அமலாக்கத் துறை மற்றும் திமுக தரப்பு வழக்கறிஞர்களின் தரப்பு கோரிக்கைகளையும் கேட்டார்.
ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே மருத்துவமனைக்கு வந்ததாகவும், ரிமாண்ட் செய்வது குறித்து நீதிமன்றத்தில் வாதங்களை வைத்துக்கொள்ளுமாறு இரு தரப்புக்கும் நீதிபதி அல்லி அறிவுறுத்தினார். பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜியை இம்மாதம் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும், அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறவும் அனுமதியளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
பின்புலம் என்ன? – தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த மாதம் தீவிர சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சென்னை அடையாறு பசுமை வழி சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணி அளவில் வந்தனர். அடையாள அட்டைகளை காண்பித்துவிட்டு, வீட்டுக்குள் சென்றனர். பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் உடன் வந்திருந்தனர். அப்போது, நடைபயிற்சிக்காக வெளியே சென்றிருந்த அமைச்சரிடம், உதவியாளர் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாதியிலேயே அவர் வீடு திரும்பினார். பின்னர், அவரும் உடன் இருக்க, வீட்டின் ஒவ்வொரு அறையாக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதே நேரத்தில், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பிஷப் கார்டன் பகுதியில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு, அபிராமபுரம் 3-வது தெருவில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகிய இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் வீட்டில் 20-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் காலை 9 மணி முதல் சோதனை நடத்தி வந்தனர். அங்கு மத்திய பாதுகாப்பு படையின் பெண் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ராமகிருஷ்ணபுரம் 2-வது குறுக்கு தெருவில் உள்ள செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், ராயனூரில் கொங்கு மெஸ் மணி, அமைச்சரிடம் கணினி இயக்குபவராக பணியாற்றிய சண்முகம்,நேர்முக உதவியாளராக பணியாற்றிய வேலாயுதம்பாளையம் கார்த்தி ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தியது.
ஈரோடு திண்டல் சக்தி நகரை சேர்ந்த டாஸ்மாக் மதுபான ஒப்பந்ததாரர் சச்சிதானத்தின் வீட்டில், கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த 5 அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி,அவர் மற்றும் மனைவி, மகளிடம் விசாரணை நடத்தினர்.
அதிமுக ஆட்சியில், 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, போக்குவரத்து கழகத்தில்வேலை வாங்கி தருவதாக கூறிபலரிடம் பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கை தொடக்கத்தில் இருந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையிலும், வருமான வரித் துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனையின் அடிப்படையிலும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததா என்று கண்டறியும் வகையிலும் இந்த சோதனை நடைபெற்றது.
செந்தில்பாலாஜியின் உதவியாளரான விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத் துறையின் 3 அதிகாரிகள், இந்தியன் வங்கியின் 2 அலுவலர்கள் ஆகியோர் மத்திய ரிசர்வ் படையின் அதிவிரைவு காவலர்கள் பாதுகாப்புடன் சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேற்று பிற்பகல் வந்தனர். ரிசர்வ் படை காவலர்கள், வளாகத்திலேயே நிற்க, அதிகாரிகள் மட்டும் முதல்வர் அலுவலகம் அருகே உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறைக்கு சென்றனர்.
அவரது உதவியாளரின் உதவியுடன் கணினி மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். வங்கி பரிமாற்றம் தொடர்பான ஆய்வு என்பதால், வங்கி அலுவலர்கள் அவர்களுக்கு உதவி செய்தனர். தகவல் அறிந்து, தலைமைச் செயலக பாதுகாப்பு பிரிவில் உள்ள உயர் அதிகாரிகள், பொதுத் துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். நேரம் ஆக ஆக, பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்கள், செய்தியாளர்கள் அதிக அளவில் கூடியதால் பரபரப்பான சூழல் உருவானது. மாலை 4.45 மணி அளவில் ஒரு அதிகாரி மட்டும் புறப்பட்டுச் சென்ற நிலையில், மற்றவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
கடந்த 2016 டிசம்பரில், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தபோது, தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் வீடு மட்டுமின்றி, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். தற்போது தலைமைச் செயலகத்தில் அமைச்சரின் அறையில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.