தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி தான் தங்கியிருந்த அபார்ட்மன்ட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு இறந்தார். இந்தச் சம்பவம் பாலிவுட்டையே ஆட்டிப் படைத்தது.
இந்த விவகாரத்தில் பல முக்கிய பாலிவுட் பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டன. போதை மருந்து, நெப்போடிசம், அரசியல் அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விவாதங்களை இது கிளப்பியது. இருப்பினும், இது இன்னும் பெரும் மர்மமாகவே இருக்கிறது. இதையடுத்து பாலிவுட்டில் நெப்போடிசம் மற்றும் அரசியல் தலைவிரித்தாடுவதாகப் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இன்று அவருக்கு நினைவுநாள். இந்நாளில் சுஷாந்த் சிங்கின் குடும்பத்தினரும், நண்பர்களும், திரைத்துறையினர் பலரும் அவரை நினைவுகூர்ந்து உருக்கமாகப் பதிவுகளை தங்கள் சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தங்கை ஸ்வேதா சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுஷாந்த் சிங்குடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “லவ் யூ பாய், உன்னுடைய புத்திசாலித்தனத்திற்கு சல்யூட். ஒவ்வொரு நொடியும் உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன். நீ இப்போது என்னில் ஓர் அங்கமாக இருக்கிறாய். என் மூச்சைப் போல் என்னுள் சேர்ந்திருக்கிறாய்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், சுஷாந்த் சிங் தனக்குப் பரிந்துரைத்த சில புத்தகங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அவரது நினைவு நாளையொட்டி உருக்கமான பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.