சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உயர்ரக சிகிச்சை கொடுத்து அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக தற்போது திமுக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை நேற்று நள்ளிரவு கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, தனக்கு நெஞ்சு வலிப்பதாக செந்தில் பாலாஜி கூறியதை அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து எச். ராஜா கூறியதாவது:
என்னா உருட்டு:
வருமான வரி சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்துள்ளது. இது ஒரு சட்ட வழக்கு. ஆனால், இதை பார்த்து ஊழல் பெருச்சாளிகளின் உருட்டல்கள் அதிகமாக இருக்கின்றன. ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட போது காங்கிரஸ் உருட்டியதை விட, மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட போது ஆம் ஆத்மி உருட்டியதை விட தற்போது அதிகமாக திமுக உருட்டி வருகிறது.
திமுக நாடகம்:
இந்த விவகாரத்தை வைத்து ஒரு நாடகத்தையே திமுக நடத்தி வருகிறது. ஏனென்றால் இது தேர்தல் நேரம். அதனால், மக்களின் பரிதாபத்தை பெற்று விடலாம் என நினைத்து திமுகவினர் கூச்சலிட்டு வருகின்றனர். அதிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பற்ற முறையில் பேசி இருக்கிறார். மத்திய அரசுக்கு எதிராக பேசினால், மக்கள் ஆதரவு கிடைக்கும் என மு.க. ஸ்டாலின் நினைக்கிறார். அது ஒரு பிரமை. அந்த பிரமையில் இருந்து முதல்வர் வெளியே வர வேண்டும்.
கருணாநிதி கைது:
டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்குவதை ஊடகங்கள் எல்லாம் வெட்ட வெளிச்சம் ஆக்கிவிட்டன. இதற்காக ஊடகங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, அனைத்து ஆதாரங்களின் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி மீதான சோதனைகளும், நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன. செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை பார்க்கும் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டது தான் நினைவுக்கு வருகிறது.
உயர் சிகிச்சை வேண்டும்:
சாதாரணமாக போலீஸார் அழைத்து சென்ற போது அவர் எப்படி எப்படி கூச்சலிட்டார் என அனைவருக்கும் தெரியும். எனவே, திமுகவின் நாடகங்களை எல்லாம் தமிழக மக்கள் பார்த்துள்ளனர். நேற்று வரை நன்றாக பேசிக்கொண்டிருந்தவருக்கு எப்படி உடல் நலம் பாதிக்கப்படும்? அனைத்தும் சந்தேகமாக இருக்கிறது. இருந்தபோதிலும், செந்தில் பாலாஜிக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் எய்ம்ஸ் மருத்துவர்களின் மேற்பார்வையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவரது உயிரை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு எச். ராஜா கூறினார்.