டி.வி நடிகர் அர்ணாவ் மிரட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ள நடிகை திவ்யா, தனக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டி கண்ணீருடன் முதல் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
சீரியலில் மட்டும் அல்ல சீரியசாக நிஜத்திலும் அழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள டி.வி நடிகை திவ்யா இவர் தான்..!
சின்னத்திரை நடிகர் அர்ணவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யா திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சொந்தமாக வீடு வாங்கி வசித்து வந்தார். இடையில் அர்னவ்வுக்கு , திவ்யாவுடன் காதல் கசந்ததால் குடும்பத்தில் விரிசல் உருவானது. கர்ப்பிணியாக இருந்த திவ்யாவை அடித்து சித்திரவதை செய்ததாக எழுந்த புகாரில் அர்னவை மாங்காடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அர்ணவ் தனியாக வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திவ்யாவிற்கு பெண் குழந்தை பிறந்தது . இந்த நிலையில் சில தினங்களாக திவ்யாவுக்கு தவறான தொடர்புகள் இருப்பதாக அர்னவ்வும், அர்ணவிற்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக திவ்யாவும் ஆடியோக்களை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சின்னத்திரை நடிகர் அர்ணவ் தனது வக்கீல்கள் மற்றும் பவுன்சர்களுடன் திவ்யா குடியிருக்கும் வீட்டிற்கு சென்றார். வீடு தனது பெயரில் இருப்பதாகவும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறி தனது வக்கீலுடன் சென்று திவ்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கதவை திறக்க மறுத்த திவ்யா, நீதிமன்ற உத்தரவில் இங்கே வரக்கூடாது என்று சொல்லி இருக்கின்றது என்று கூறி உள்ளே விடாமல் தடுத்தார்
தகவல் அறிந்து வந்த திருவேற்காடு போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆவணங்களை கொண்டு வருமாறு கூறிய நிலையில் அர்ணவ் தரப்பினர் அங்கிருந்து கிளம்பி சென்றனர். அர்ணவ் கைதாகி சிறைக்கு சென்ற பிறகு தன்னையும் குழந்தையையும் பார்க்க வீட்டிற்கு வரவில்லை என்றும் தற்போது பவுன்சர்கள், வக்கீல்களுடன் வந்து தன்னை மிரட்டுவதாகவும் ஆரம்ப நாள் முதல் வீட்டை வாங்க தனது நகையை கொடுத்ததாகவும் மாத தவணையை தான் கட்டி வருவதாகவும் இந்த வீடு தனக்கு சொந்தமானது என்றும் கூறிய திவ்யா, தனக்கும் தனது 2 மாத குழந்தைக்கும் உரிய பாதுகாப்பு வழங்க முதல் அமைச்சருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்
ஆவணங்களை பரிசோதித்து முடிவு எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.