டொரன்டோ: போலி அனுமதி கடிதங்கள் வாயிலாக, விசா பெற்று கனடாவுக்கு படிக்க வந்து, வெளியேற்ற நடவடிக்கையை எதிர்கொள்ளும் இந்திய மாணவர்கள், தாங்கள் ஏமாற்றப்பட்டதை நிரூபிக்க வாய்ப்பளிப்பது தொடர்பான செயல்முறையை கனடா அரசு உருவாக்கி வருகிறது.
வட அமெரிக்க நாடான கனடாவில் உள்ள கல்வி நிலையங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இதில், பல மாணவர்கள், கல்வி நிலையங்களின் பெயர்களை பயன்படுத்தி ‘ஏஜன்ட்’கள் அளித்த போலி அனுமதி கடிதங்களை வைத்து விசா பெற்று கனடா வந்தது வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து, 700 இந்திய மாணவர்களை வெளியேற்ற கனடா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து, கனடா பார்லிமென்டில் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, அந்நாட்டு குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத்துறை அமைச்சர் ஷான் பிரேசர் கூறியதாவது:
ஏமாற்று பேர்வழிகளால் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு தகுந்த தீர்வை இந்த அரசு ஏற்படுத்தி தரும்.
மோசடி ஏஜன்ட்களால் ஏமாற்றப்பட்டதை நிரூபிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு உருவாக்கி தரப்படும். அதற்கான செயல்முறையை அரசு உருவாக்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement