புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது கைதுக்கு தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
மல்லிகார்ஜுன கார்கே: காங்கிஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இது எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மோடி தலைமையிலான அரசு மேற்கொள்ளும் துன்புறுத்தல் மற்றும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே அன்றி வேறொன்றும் இல்லை. இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளான நாங்கள் யாரும் அஞ்சிவிடமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவால்: ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், இன்று (ஜூன் 14) பதிவு செய்த ட்வீட்டில், ” சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற விசாரணை அமைப்புகளின் பெயர்களை பாஜக சேனா என்று மாற்ற வேண்டும். முன்பொரு காலத்தில் இந்த விசாரணை அமைப்புகள் மீது மக்களுக்கு மரியாதை இருந்தது. அவர்கள் எங்கேயாவது சோதனை நடத்தினால், யாரையாவது கைது செய்தால் அவர்கள் நிச்சயமாக குற்றம் செய்திருப்பார்கள் என்று நம்பப்பட்டது. ஆனால் இன்று இந்த இரண்டு அமைப்புகளின் பாஜகவின் அரசியல் ஆயுதங்களாக செயல்படுகின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத்: “பாஜக பிரமுகர்கள் மீது நான் பலமுறை ஆதாரங்களுடன் ஊழல் புகார்கள் கொடுத்துள்ளேன். ஆனால் அமலாக்கத் துறை அவர்கள் மீதெல்லாம் ஏன் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை புகார் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
இத்தனைக்கு நான் சார்ந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள் மீது நான் ஊழல் புகார் கொடுத்துள்ளேன். அவற்றுக்கு இதுவரை அமலாக்கத் துறையிடம் இருந்து எவ்வித பதிலும் பெறவில்லை. அவர்கள் மீதெல்லாம் விசாரணை நடப்பது எப்போது? இதுவே தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக், ஆம் ஆத்மியின் சத்யேந்திர ஜெயின், மனிஷ் சிசோடியா என்றால் உடனடியாக நடவடிக்கை பாயும்” என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.
மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல்: “இந்தியாவில் எந்த மாநிலத்தில் எல்லாம் எதிர்க்கட்சி ஆட்சி செய்கிறதோ அங்கெல்லாம் பாஜக இரட்டை இஞ்சின் அரசு இரட்டைக்குழல் துப்பாக்கி அரசாக மாறிவிடும். அந்த இரண்டும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை” என்று கூறியுள்ளார் மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல்.
ராகவ் சட்டா: ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி ராகவ் சட்டா அக்கட்சியின் அறிக்கையை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அத்துடன் அவர், “தமிழ்நாடு அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையினரால் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட மனிதத் தன்மையற்ற செயலைக் கண்டித்து எங்கள் கட்சி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.