தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவாகாரத்தில், இன்று மாலை 3:20 மணிக்கு நீதிமன்றத்திலிருந்து புறப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகுச் சென்ற மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, செந்தில் பாலாஜியை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கினார்.
இந்த நிலையில், இன்று காலை செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை, மாலை 4:30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது. செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், அமலாக்கத்துறை தரப்பில் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும் வாதாடினர்.
முதலில் வாதத்தைத் தொடங்கிய என்.ஆர்.இளங்கோ, செந்தில் பாலாஜிமீதான கைது நடவடிக்கையின் மூலம் ஜனநாயகம், மனித உரிமை உள்ளிட்ட அடிப்படை மாண்புகள் அனைத்தும் மீறப்பட்டதாகக் கூறினார். 2021-ம் ஆண்டிலேயே செந்தில் பாலாஜிமீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தபோதும், அந்த வழக்கில் இதுவரை கைதுசெய்யவில்லை எனவும் கூறினார். தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தியது அரசின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல் என்ற என்.ஆர்.இளங்கோ, “கைது நடவடிக்கைக்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. குடும்பத்தினரிடம் கைதுக்கான காரணம் குறித்து தெரிவிக்கவில்லை” என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ரிமாண்டுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதால், இந்தக் கைது சட்டரீதியான அங்கீகாரம் பெற்றுவிட்டது” என்றார்.
அதற்கு என்.ஆர்.இளங்கோ, “இருப்பினும், அமலாக்கத்துறையின் அத்துமீறல்களைப் பேச வேண்டியிருக்கிறது. சட்டரீதியிலான விதிமீறலே இந்தக் கைது நடவடிக்கை” எனக் கூறி, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென வாதிட்டார். மேலும், “செந்தில் பாலாஜியின் விடுதலைக்காக நான் வாதிடவில்லை. அவரது உயிரைக் காப்பாற்றுவதற்காகவே வாதிடுகிறேன். ஓமந்தூரார் மிகவும் பெருமை வாய்ந்த மருத்துவமனை. அங்கு செந்தில் பாலாஜிக்கு 3 இடங்களில் அடைப்பு இருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.
ஆனால், அமலாக்கத்துறை மனிதத் தன்மையற்ற முறையில் ஓமந்தூரார் மருத்துவமனையின் அறிக்கையைச் சந்தேகித்து ESI-ல் அறிக்கை கேட்டது. செந்தில் பாலாஜியின் personal surgeon காவேரி மருத்துவமனையில் இருப்பதால் உடனடியாக அவரை நீதிமன்றக் காவலில் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும்” என்றார்.
தொடர்ந்து, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் தனது வாதத்தைத் தொடங்கினார். “செந்தில் பாலாஜியிடம் கைதுக்கான காரணம் குறித்த நோட்டீஸ் மற்றும் சம்மன் வ்பழங்கப்பட்டபோது அதை அவர் வாங்கவில்லை. அவர் மனைவி மற்றும் சகோதரரை தொலைபேசியில் அழைத்தோம். குறுஞ்செய்தி அனுப்பினோம். இவை எதற்குமே அவர்கள் பதிலளிக்காத நிலையில், மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தோம். எங்கள் அழைப்பை ஏற்காமல், நோட்டீஸை வாங்காமல் சட்ட விரோத கைது நடவடிக்கை என்று சொல்வது நியாயமா?” என்று வாதிட்டார்.
PMLA எனப்படும் பண மோசடி தடுப்புச் சட்டம் குறித்த முக்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்ட ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “நேற்று வரை நலமாக இருந்தவருக்கு திடீரென எப்படி 3 அடைப்புகள் ஏற்பட்டன. இதில் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. மேலும் அவர் மாநில அரசு மருத்துவமனையில் இருப்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டு, “செந்தில் பாலாஜியை 15 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும்” எனக் கூறி, அதற்கான கோரிக்கை மனுவை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். மேலும், சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைத்து செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து விசாரிக்க அனுமதிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 ரத்த நாளங்களில் 70% அடைப்புகள் இருப்பதாக ஓமந்தூரார் மருத்துவமனை கூறியிருக்கிறது. இ.எஸ்.ஐ மருத்துவமனையும் இதையே கூறியிருக்கிறது. அமலாக்கத்துறையின் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு மருத்துவக் குழுவும் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதிக்கட்டும். அவரைப் பார்க்கட்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமலாக்கத்துறை வழக்கறிஞர், “சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். பல வழக்குகளில் தமிழ்நாடு அரசு சிறந்த மருத்துவர்களைக் கொண்டதாக வாதிடும்போது, ஏன் செந்தில் பாலாஜியை மட்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்… அப்படி என்றால் அனைத்து மக்களுக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்குவீர்களா” என கேள்வி எழுப்பினார். இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், “அவரது Personal surgeon காவேரி மருத்துவமனையில் இருப்பதாலே அனுமதி கேட்கிறோம்” என பதிலளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமலாக்கத்துறை 15 நாள்கள் போலீஸ் காவல் கேட்ட மனுமீது விசாரணை நாளை நடைபெறும் எனத் தெரிவித்தார். இந்த மனுமீதான விசாரணை முடிந்த பிறகே செந்தில் பாலாஜியின் ஜாமீன் குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்.