இனி எங்க கண்ட்ரோல்.. சிறைத்துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றது ஓமந்தூரார் மருத்துவமனை.. அடுத்து என்ன?

சென்னை:
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை தமிழக சிறைத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.61 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணையும், ரெய்டுகளும் நடந்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

அப்போது அவர், தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக கூறியதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயக் குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதியான அல்லி, இன்று மாலை மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரித்தார்.

அப்போது செந்தில் பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் இடைக்கால ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், இன்று இரவு 7.30 மணிக்கு புழல் சிறைத்துறை உயரதிகாரி ஒருவர், ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனால் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தற்போது தமிழக சிறைத்துறை ஆய்வாளர் தலைமையிலான 10 போலீஸார் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருபகுதியினர், செந்தில் பாலாஜி சிகிச்சை பெறும் 6085 அறைக்கு முன்பு பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். பிற போலீஸார் மருத்துவமனையை சுற்றிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓமந்தூரர் மருத்துவமனை தற்போது சிறைத்துறை கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. இதனால் செந்தில் பாலாஜி எந்நேரமும் காவலில் எடுக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.