புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ரோந்து பணியின் போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த ஒரு வாகனத்தை நிறுத்தி வாகன சோதனை செய்யுமாறு தனிப்பிரிவு அலுவலகத்திற்கு தொலைபேசி மூலம் உத்தரவிட்டார்.
மாவட்ட கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில், மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும், செக்போஸ்ட்களிலும், வாகன சோதனை நடைபெற்றது. மேற்கண்ட வாகன சோதனையில் நெடுஞ்சாலை ரோந்து காவல் அலுவலர்களும் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, இரவு 0830 மணியளவில், அம்மாசத்திரம் ராயல் பாலிடெக்னிக் கல்லூரி அருகே, நெடுஞ்சாலை ரோந்து-III SSI Tr.நாராயணன் தலைமையிலான இரண்டு காவலர்களும் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் SSI கவிதா, தலைமையிலான காவலர்களும் மேற்படி சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த TATA Yodha வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, வாகனத்தின் ஓட்டுநரும், உடனிருந்தவரும் தப்பி ஓடிவிட்டனர்.
சோதனையில் வாகனத்தில் காய்கறி மூட்டைகளுக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 194 கஞ்சா பொட்டலங்கள் (தலா 2 கிலோ) என மொத்தம் 388 கிலோ கஞ்சா கைபற்றப்பட்டது.
இதனையடுத்து வாகனம் மற்றும் கைபற்றப்பட்ட கஞ்சாவை புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவிடம் ஒப்படைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.