புதுடெல்லி: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருப்பது மோடி தலைமையிலான அரசின் பழிவாங்கல் நடவடிக்கையே என்று காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
இது எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மோடி தலைமையிலான அரசு மேற்கொள்ளும் துன்புறுத்தல் மற்றும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே அன்றி வேறொன்றும் இல்லை. இதுபோன்ற வெட்கக்கேடான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளான நாங்கள் யாரும் அஞ்சிவிடமாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் கண்டனம்: “விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்து – மனிதநேயமற்ற முறையில் பாஜக.,வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்துக்குரியது” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வைகோ கண்டனம்: அமைச்சர் செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள மதிமு பொதுச்செயலாளர், “மத்திய பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை ஏவி விடுவது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியும் மாநிலங்களில் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.
மேற்கு வங்காளம், புது டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜக நடத்திய அரசியல் சித்து விளையாட்டுகளை தமிழ்நாட்டிலும் அரங்கேற்றுவதற்கு திட்டம் தீட்டி, அதைச் செயல்படுத்த முனைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கண்டனம்: முன்னதாக தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் தலைமைச் செலயலக அறையில் அமலாகத்துறையினர் சோதனை நடத்தியதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,”விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது” என்று மம்தா பானர்ஜி தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்,”அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மூலம் நாட்டின் ஜனநாயகத்துக்கு பாஜக கேடு விளைவிக்கிறது என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
தேதியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் “செந்தில்பாலாஜி மீதான சோதனை மூலம் தென்மாநிலங்களை பழிவாங்க தொடங்கியுள்ளது அமலாக்கத் துறை” என்று கூறியுள்ளார்.
நள்ளிரவில் கைது: செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை அதிகாலை 2 மணி வரை சுமார் 18 மணி நேரம் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வசித்து வரும் அரசு வீடு, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினரின் சோதனை நடைபெற்றது.
நெஞ்சுவலி: காலை முதல் அமைச்சர் செந்தில்பாலாஜியை திமுக உறுப்பினர்கள் யாரும் சந்திக்க அமலாக்கத் துறையினர் அனுமதிக்கவில்லை. அவரை சந்திக்க அனுமதி வேண்டி அவர்கள் முழக்கமும் எழுப்பி இருந்தனர். இந்தச் சூழலில் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் சென்னை – ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அனுமதிக்கப்பட்டார்.