பாரிஸ் :அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், உலகில் இரண்டாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக இந்தியா மாறும் என, சர்வதேச எரிசக்தி அமைப்பு தெரிவித்து உள்ளது.
உலகளவில் எண்ணெய் நுகர்வில், முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. எண்ணெய் தேவை அதிகரிப்பால், 2027ம் ஆண்டிற்குள் சீனாவை பின்னுக்குத் தள்ளி, உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக இந்தியா மாறும் என, சர்வதேச எரிசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளின் எண்ணெய் தேவை மற்றும் நுகர்வு குறித்த ஆய்வை, இவ்வமைப்பு அண்மையில் மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:சீனப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, நடப்பாண்டில் அந்நாட்டின் தேவை, ஒரு நாளைக்கு, 24 லட்சம் பீப்பாய்களாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் உலகளாவிய எண்ணெய் தேவையின் வளர்ச்சியில், 60 சதவீதத்தை சீனா கொண்டிருக்கும். பின்னர், தொழில் வளர்ச்சி குறைவு மற்றும் உள்நாட்டு நுகர்வு குறைவு உள்ளிட்ட காரணங்களால், சீனாவின் தேவை சரிய வாய்ப்புள்ளது.
மறுபுறம், இந்தியாவின் தேவை சீராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2022 – 23ல், இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வு, 22.23 கோடி டன்னாக இருந்தது. இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும், 10.20 சதவீதம் அதிகமாகும். கடந்த ஏப்ரல் மாதம் வரை உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி, நாள் ஒன்றுக்கு, 8.23 கோடி பீப்பாய்களாக இருந்ததாக மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆசிய நாடுகள் உற்பத்தியில் சாதனை படைத்ததால் இது சாத்தியமானது.இவ்வாறு அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement