புதுடெல்லி: இந்தியாவில் 2021 ஜனவரியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதற்காக கோவின் இணையதளம் தொடங்கப்பட்டது.
தடுப்பூசிக்கான முன்பதிவு, தடுப்பூசி மையங்கள் உள்ளிட்டதகவல்கள் இதில் இடம்பெற்றிருந்தன. தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் விவரம் இதில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பிறகு தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழும் இதிலிருந்து வழங்கப்பட்டது.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனைத்து இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களும் இணைய தளத்தில் கிடைப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அரசுக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கோவின் இணையதளம் முற்றிலும் பாதுகாப்பானது. தகவல் கசிவு விவகாரம் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு செர்ட்-இன் (இந்திய கணினி அவசரகால எதிர் நடவடிக்கை குழு) கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் கோவின் இணைய தளத்திலிருந்து நேரடியாக தகவல் கசியவில்லை என முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கோவின் இணைய தளத்தில் தரவுகளின் பாதுகாப்புக்கு போதியபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தகவல் கசிந்துள்ளதாக வெளியான செய்தி குறும்புத்தனமானது” என கூறப்பட்டுள்ளது.