சென்னை: விஜய்யின் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் லியோ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது கிளிம்ப்ஸ் விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லியோ படத்தின் பாடல் ஒன்றில் அனிருத்தை லோகேஷ் களமிறக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
தளபதியுடன் இணையும் ராக்ஸ்டார்:விஜய்யின் 67வது படமாக உருவாகும் லியோ அக்டோபர் மாதம் வெளியாகிறது. மாஸ்டர் படத்திற்குப் பின்னர் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணி லியோவிலும் இணைந்துள்ளது. இதனால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் ஜானரில் ஆக்ஷன் படமாக உருவாகிறது லியோ.
விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், நரேன், மேத்யூ தாமஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. இத்தனை பேரையும் லோகேஷ் எப்படி திரையில் காட்டப் போகிறார், அவர்கள் எவ்வளவு நேரம் வருவார்கள் என்பது புதிராக உள்ளது.
இவர்கள் போதாது என ராக்ஸ்டார் அனிருத்தையும் லியோ படத்தில் களமிறக்கவுள்ளாராம் லோகேஷ் கனகராஜ். பாடல்கள், பிஜிஎம், தீம் மியூசிக் என லியோ படத்திற்காக அனிருத் பிஸியாக காணப்படுகிறார். அதுமட்டும் போதுமா வந்து ஒரு குத்தாட்டம் போட்டால் நன்றாக இருக்கும் என அவரையும் களமிறக்கிவிட்டாராம் லோகேஷ். அதன்படி ஒரு பாடலில் விஜய்யுடன் வைப் செய்யவுள்ளாராம் அனிருத்.
2000 நடன கலைஞர்களுடன் விஜய் நடனம் ஆடும் பாடல் ஒன்றை படமாக்க லோகேஷ் பிளான் செய்துள்ளார். இந்தப் பாடலின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதில் தான் விஜய்யுடன் இணைந்து அனிருத் குத்தாட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்க்காக பல ஹிட் பாடல்கள் கொடுத்துள்ள அனிருத் அவருடன் இதுவரை நடனமாடியது கிடையாது. அந்த குறை லியோவில் தீர்த்து வைக்கப்பட உள்ளது.
அதேபோல், விஜய் – சஞ்சய் தத் மோதும் ஆக்ஷன் காட்சிகளும் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறதாம். இதில் சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதேபோல், அவரை வைத்து சில மாண்டேஜ் சீன்ஸ் படமாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. லியோவை தொடர்ந்து லோகேஷ் இயக்கும் படங்களில் LCU இருந்தால், அதில் சஞ்சய் தத்தின் காட்சிகளை சேர்ந்துக் கொள்ளலாம் என லோகேஷ் முடிவு செய்துள்ளாராம்.